தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு இடம் மீட்கப்பட்டு அங்கன்வாடி மையம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுரண்டை அருகே உள்ள பலத்திரராமபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட கங்கனாங்கிணறு பகுதி சிறு குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு ஊத்துமலை கங்கனாங்கிணறு சாலையின் ஓரத்தில் வருவாய்த் துறைக்கு சொந்தமான 5 சென்ட் இடத்தில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அமைத்திருந்தனர்.
அதனை அகற்ற கூறி வருவாய்த் துறை சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, வீகேபுதூர் தாசில்தார் வெங்கடேஷ் தலைமையில் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், ஆலங்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஊத்துமலை எஸ்ஐ கனகராஜ், ஆர்ஐ முத்தையா, விஏஒ அந்தோணி, உதவியாளர் செல்வக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து அந்த இடம் சீரமைக்கப்பட்டு விரைவில் அங்கன்வாடி கட்டடம் கட்டப்படும் என தாசில்தார் வெங்கடேஷ் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.