கொரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு சார்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை தன்னார்வலர்கள் அவரவர் மத வழக்கப்படி ஜாதி மத பாகுபாடின்றி நல்லடக்கம் செய்யும் மனிதாபிமானமிக்க சேவையை செய்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் முதலியார் பட்டியில் 66 வயதுடைய முதியவர் ஒருவர் 21.05.21 வெள்ளிக் கிழமை கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இறந்தவரின் உறவினர்கள் தமுமுக மற்றும் மமக மாவட்ட தலைவர் ரசூல் மைதீனிடம் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்படி திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் கொரோனாவினால் உயிரிழந்தவரின் உடலை பெற்று கொண்ட நெல்லை மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர் முகம்மது யூசுப் சுல்தான், மாவட்ட துணைச் செயலாளர் பெஸ்ட் ரசூல், இளைஞரணி செயலாளர் ரியாசுர் ரகுமான், சவுதி மண்டல நிர்வாகி பத்ருதீன், மேலப்பாளையம் பகுதி துணைத் தலைவர் குதா, ஆம்புலன்ஸ் டிரைவர் யாசர் ஆகியோர் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல் படியும் பாதுகாப்பான முறையில் முதலியார்பட்டி அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இதுவரை தமுமுக தன்னார்வலர்கள் 27 உடல்களை பெற்று அதன் இறுதி கடமையை நிறைவேற்றி உள்ளனர். மேலும் கொரோனா முதல் அலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.