மகாகவி பாரதியின் படைப்புகளை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் நெல்லை அரசு அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து உரையரங்கம் நிகழ்வை நடத்தியது. இணைய வழியில் நடந்த இந்நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா வரவேற்புரை வழங்கினார். நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமையுரை ஆற்றினார். தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தொடக்கவுரை வழங்கினார். சென்னை பொதிகைத் தொலைக்காட்சியின் மேனாள் இயக்குநர் கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுமையாக “பாரதியுரை” வழங்கினார். அவர் பேசுகையில்”சொல்லாக அன்றி வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிச் சென்றவர் நம் பாரதி. தாய் நாட்டையும்,தாய் மொழியையும் சுவாசித்தார். தனக்காக அன்றி தேசத்திற்காகவும், தாய் மொழிக்காகவும் சுவாசிக்கச் சொன்னார். பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியவர். நிமிர்ந்து உட்காரவும்,நடக்கவும் முதுகுத் தண்டாய் விளங்கியவர் பாரதி. நமது வாழ்க்கை நீளமாகவும் , ஆழமாகவும் இருக்கணும். நாள் காட்டியாக அன்றி கருத்தியலாக இருக்கணும். அச்சமில்லாத வாழ்க்கையை வாழச் சொன்னவர் அவர். அதற்காக இன்றைய இளைஞர்கள் பாரதியின் கவிதை நூலை ஒரு கையிலும்,திருக்குறளை மறு கையிலும் ஏந்த வேண்டும். ” இவ்வாறு கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கல்வி உளவியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் த.சிவசக்தி ராஜம்மாள் மற்றும் துபாய் சமூக ஆர்வலர் முனைவர் முகமது முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் பேரா நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி, திருவள்ளுவர் கல்லூரி பாபநாசம், திருச்சிலுவைக் கல்லூரி நாகர்கோவில், வே.வ.வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரி விருதுநகர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிகள் திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி,மூகாம்பிகை கல்வியியல் கல்லூரி தர்மபுரி, இசுலாமியக் கல்லூரி வாணியம்பாடி, அரசு மகளிர் கல்லூரி இராமநாதபுரம்,டோக் பெருமாட்டி கல்லூரி மதுரை, எம்.வி.முத்தையா அரசு மகளிர் கல்லூரி திண்டுக்கல், சென்னைப் பல்கலைக் கழகம்,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உட்பட தமிழகமெங்கிலுமிருந்தும் பல கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் இணையத்தில் இணைந்திருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.