நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பிப்ரவரி 15 நாளை நடக்கவிருக்கும் உலகத் தாய்மொழி தின விழாவில் முதல் படைப்பாளிகளுக்கு ரூபாய் இருபத்தைந்தாயிரம் பணப் பரிசு வழங்கப்படுகிறது.பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் உலக அளவில் கவிதை நூல் போட்டி நடத்தி, சிறந்த கவிதை நூல்களை தேர்ந்தெடுத்து பணப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. பொதிகைத் தமிழ்ச் சங்கம் நடத்திய 2019-ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் படைப்பாளிகளின் கவிதை நூல்களுக்கான போட்டியில் கூடலூர் கவிஞர் கு. நிருபன் குமார் எழுதிய இறகின் வெளி என்ற நூலும், சிங்கப்பூரில் வசித்து வரும் சித்ரா ரமேஷ் எழுதிய ஒரு கோப்பை நிலா என்ற நூலும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நூலாசிரியர்களுக்கு பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பில் தலா ரூபாய் ஐந்தாயிரம் வீதம் மொத்தம் ரூபாய் பத்தாயிரம் பணப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. பெண் கவிஞர்களுக்கான சிறப்புப் போட்டியில் இராஜபாளையத்தைச் சார்ந்த பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் எழுதிய நீயே முளைப்பாய் என்ற கவிதை நூல் முதல் பரிசுக்கும், கோயம்புத்தூர் கவிஞர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ எழுதிய எங்களுக்கும் தொழில் என்ற கவிதை நூல் இரண்டாவது பரிசுக்கும் தேர்வாகின. இந்த நூலாசிரியர்களுக்கு முதல் பரிசு ரூபாய் பத்தாயிரமும்,இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரமும் ழகரம் வெளியீடு சார்பில் வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுகள் பிப்ரவரி 15 நாளை பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெறும் உலகத் தாய்மொழி நாள் விழாவில் வழங்கப்படுகிறது. மேற்கண்ட தகவல்களை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.