தென்காசி மாவட்டத்தில் கொரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை கண்டித்து தவ்ஹீத் ஜமாத்தினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். காவல்துறை தடுத்து நிறுத்தியதால் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் ஜலாலுதீன் , மாநிலச் செயலாளர் முகம்மது பைசல், மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித், பொருளாளர் செய்யது மசூது சாஹிப், துணைத் தலைவர் அப்துல் காதர் ,துணைச் செயலாளர்கள் முகம்மது புகாரி, அப்துல் சலாம், ஹாஜாமைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள கொரானா வைரஸ் காரணமாக மக்களுக்கு அதிக அளவு சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் இருதயக் கோளாறு,சுவாச பிரச்சனை,இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி, சிறுநீரக டயாலிசிஸ் மற்றும் மகப்பேறு போன்ற நோய்களுக்கு மருத்துவம் செய்ய அரசு மருத்துவமனைகளை நாடினால் அரசு மருத்துவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்டி எந்த சிகிச்சையும் அளிக்காமல் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மருத்துவம் செய்யாமலே வீடுகளில் நோயுடன் முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா அல்லாத நோய்களுக்கான முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் உள்ள உதனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய்களை கட்டணமாக வசூல் செய்துவிட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் எனக் கூறி சிகிச்சைக்காக பல லட்சங்களை தந்தால் மட்டுமே இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்போம் என்பதாக தெரிவித்து இறந்த பின்பும் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிவிட்டு பிரேதங்களை கொடுத்ததையும் தமிழக சுகாதாரத்துறை கண்டு கொள்ளாமல் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அவல நிலைகளை கண்டித்தும், தென்காசியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு வரும் பெரும்பான்மையான நோயாளிகள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் உடலளவில் பலவீனமடைந்திருக்கும் நோயாளிகள் மனதளவிலும் பாதிக்கப்பட்டு அங்கேயே மரணமடைந்து விடுகின்றனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா அல்லாத இயற்கை மரணம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய 5 அரசு மருத்துவ மனைகளிலும் உடனடியாக தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும். போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும், அத்தோடு கொரோனா அல்லாத நோய்களுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் செய்ய சுகாதாரதுறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி , கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் , வாசுதேவநல்லூர், செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, பொட்டல்புதூர் , மாலிக்நகர், வீராணம் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்திருந்தனர். இவர்களை தென்காசி துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் தென்காசி சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் புதிய பேருந்து நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் அங்கேயே ஆர்ப்பாட்டம் செய்து கண்டன உரை ஆற்றி கலைந்து சென்றனர். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












