ஊசி போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை;இரண்டு மெடிக்கல்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்-சுரண்டை அருகே பரபரப்பு…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஊசி மற்றும் குளுக்கோஸ் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த இரண்டு மெடிக்கல்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கீழச்சுரண்டை பகுதிகளில் உள்ள மெடிக்கல்களில் மருந்து மாத்திரைகள் மட்டும் விற்பனை செய்யாமல் ஊசி மற்றும் குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தகவல் சென்றது. உடனடியாக இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் வீகே புதூர் தாசில்தார் முருகு செல்வி, பாவூர்சத்திரம் அரசு மருத்துவர் டாக்டர் கீர்த்திகா, சுரண்டை வருவாய் அலுவலர் மாரியப்பன், விஏஓ வெள்ளைப்பாண்டி, சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம உதவியாளர் ஜேம்ஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கீழச்சுரண்டை மெடிக்கல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது கீழச்சுரண்டை மெயின் ரோட்டில் மெடிக்கல் வைத்திருந்த வைரவேல் பெருமாள் மகன் வி.முருகன் (வயது-47)  என்பவர்  பிரியா மெடிக்கல்ஸ் என்னும் பெயரில் நடத்தி வந்த மெடிக்கல் மற்றும் அதே பகுதியைச் சார்ந்த திரு வேல்மயில் என்பவர் நடத்தி வந்த வசந்தம் மெடிக்கல் ஆகியவற்றில் சோதனை நடத்திய போது அதில் விற்பனைக்கு இருந்தவர்கள் மெடிக்கல் நடத்துவதற்கான  டிபார்ம் படிப்பு இல்லாததும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஊசி போட்டும் குளுக்கோஸ் ட்ரிப்ஸ் ஏற்றியும் வந்ததாக தெரியவந்தது.இதனை தொடர்ந்து இரண்டு மெடிக்கல்களையும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.இது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!