தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த தொழிலாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் ககன்னார் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மாரியப்பன் (வயது 38). இவர் பன்றி வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு வந்து திடீரென தீக்குளிக்க முயற்சித்தார்.இதனைக் கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று மாரியப்பனை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட துணை ஆட்சியர் கோகிலா அங்கு விரைந்து சென்று மாரியப்பனிடம் விசாரணை செய்தார். அப்போது மாரியப்பன் தான் கொண்டு வந்த மனுவை துணை வட்டாட்சியரிடம் கொடுத்தார்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மாரியப்பனும், கடையநல்லூரைச் சேர்ந்த கனி என்பவரின் மகன் மாரிமுத்து ஆகிய இருவரும் இருவரும் பன்றி மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர்.பன்றிகளைவளர்ப்பதற்காக ஊர் எல்லைக்கு வெளியே இடம் பார்த்துள்ளனர். அப்போது அவர்களிடம்மேலக்கடையநல்லூர் மலம்பேட்டை தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் பரமசிவன் மற்றும் அவரது மாமனார் சொக்கம்பட்டியை சேர்ந்த மாடசாமி மற்றும் செல்லத்துரை, பரமசிவன் தாயார் ஆகியோர் அவர்களிடம் கடையநல்லூர்தாலுகா, கம்பனேரி புதுக்குடி கிராமத்தில்1 ஏக்கர் 3 செண்ட் நிலம் உள்ளது என்று அதனை ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கிரையம் பேசியுள்ளனர். பின்னர் பத்திர செலவிற்கு ரூ.50 ஆயிரம் என அவர்கள் கூறி மொத்தம் ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்டு கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரமசிவன் இவ்விருவர் பெயருக்கும் பத்திர பதிவு செய்து கொடுத்துளார்.பின்னர் மேற்படி இடத்திற்கு மாரியப்பனும், மாரிமுத்துவும் சென்ற போது, அங்கு வந்த கடையநல்லூர் வாணுவர் தெருவை சேர்ந்த சேக் உஸ்மான் என்பவரின் மகன் முகம்மது யூசுப் என்பவர் மேற்படி இடம் தனக்குரியது என்றும், உங்களை யாரோ ஏமாற்றி விட்டனர் என்று கூறியுள்ளார். இதன் பின்னர் முகம்மது யூசுப் இது குறித்து தென்காசி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்து பத்திர பதிவை ரத்து செய்துள்ளார்.இது சம்பந்தமாக 19.08.2020 காலை 9 மணியளவில் மாரியப்பன், அவர் மனைவி, மாரிமுத்து, அவர் மனைவி ஆகியோர் பரமசிவன் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அதற்கு பரமசிவன், அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் பரமசிவன் தகப்பனார் மற்றும் அவரது மாமா மாடசாமி ஆகியோர் 4 பேர்களையும் அடித்து உதைத்து, பணம் கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும் இவர்களின் சாதியை குறித்து அவதூறாக கூறியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணம் ரூ.9 லட்சத்தை அவர்களிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என மாரியப்பன் மனுவில் கூறியுள்ளார்.இது தொடர்பான ஆவணங்களை கொடுங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆட்சியர் கூறியதை அடுத்து மாரியப்பன் ஆவணங்களை தருவதாக கூறி சென்றார்.இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.