சுரண்டை அருகே உடல் நலம் சரியில்லாத தகப்பனாரை பார்க்க சென்னையிலிருந்து பைக்கில் வந்த ராஜகோபாலபேரி கிராம பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கிராமமே சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.சுரண்டை அருகே உள்ள ராஜகோபாலப்பேரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவனு பாண்டி இவரது மனைவி கவிதா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சென்னையில் தோட்ட வேலை பார்த்து வருகின்றனர், இந்நிலையில் கவிதாவின் தந்தை சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனால் உடல் நலம் சரியில்லாத தனது தந்தையை பார்ப்பதற்காக கவிதா குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து பைக்கில் ராஜகோபாலபேரிக்கு வந்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி வந்து உடனடியாக சுரண்டைக்கு வந்து ஆஸ்பத்திரிக்கு சென்று தகப்பனாரை பார்த்து விட்டு சென்றிருக்கிறார். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவருக்கு 14 ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்காக மாதிரியை எடுத்து அனுப்பி உள்ளனர்.அதில் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிகரன், தலைமையில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் ராஜகோபாலபேரியில் முகாமிட்டு உடனடியாக கிராமத்தை சீல் வைத்து முடக்கினர்.
அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 6 பேர்களை தனிமைப் படுத்தியுள்ளனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பரிசோதனையில் கொரோனா இல்லையென்றால் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.