கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? சீமான் கேள்வி..

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? சீமான் கேள்வி..

கேரள மாநிலத்திலிருந்து மண்ணுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நோய் பரப்பும் மருத்துவக் கழிவுகள் மற்றும் அனைத்தும் தமிழ்நாட்டு எல்லையில் மலைமலையாகக் கொட்டப்படுவது தொடர்கதையாகிவிட்டது. பல ஆண்டுகளாகத் தொடரும் இக்கொடுமைகள் குறித்து தமிழ்நாடு அரசிடம் பலமுறை முறையிட்டும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு கழிவுகள் கொட்டுவதைக் கண்டுகொள்ளாது அலட்சியமாகச் செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடி வருவதன் விளைவே தற்போது புற்றுநோய் மருத்துவக் கழிவுகளை திருநெல்வேலி மாவட்ட எல்லையில் கொட்டும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

கேரளாவில் கட்டப்படும் விழிஞ்சியம் துறைமுகத்திற்காக திமுக அரசின் முழு ஆதரவுடன் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மலைகளை வெட்டி கனிம வளங்களைக் கடத்தும் கொடுமைகள் நாள்தோறும் நடைபெறுகின்றது. அதனைத் தடுக்க நாம் தமிழர் கட்சி போராடினால், போராடுபவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்கிறது திராவிட மாடல் திமுக அரசு.

இயற்கை வளங்கள் நிரம்பப்பெற்ற கேரள நாட்டில் ஏறக்குறைய 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைகள் நீள்கிறது. ஆனாலும், அங்கு வளர்ச்சித்திட்டங்கள் எனும் பெயரில் மலைகளைச் சிதைக்கவோ, கனிம வளங்களை எடுக்கவோ எதன்பொருட்டும் இயற்கை மீதான வன்முறையை அம்மாநில அரசு அனுமதிப்பதில்லை. தனது மலைகளைக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கேரள அரசு, தமிழக மலைகளைத் தகர்த்து கொள்ளையிட முனைவதுதான் பெருங்கொடுமை. அதற்கு தமிழ்நாடு அரசும் துணைபோவது பச்சைத்துரோகம்.

முல்லைப் பெரியாறு பேபி அணைப் பகுதியில் இடையூறாக இருந்த மரங்களை வெட்ட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அனுமதி தராமல் 40 ஆண்டுகளாக கேரள அரசு இழுத்தடித்தது. ஆனால், தமிழ்நாடு அரசு குமரி மலைகளை வெட்டி கேரளாவுக்கு அனுப்பப்படுவதை வேடிக்கை பார்க்கிறது. மரங்களை வெட்டினால் மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால் மலைகள் மீண்டும் வளராது. அந்த மலைகள் கொள்ளைபோக திமுக அரசு கொஞ்சமும் தயக்கமோ, குற்றவுணர்வோ இன்றி அனுமதிக்கிறது.

‘கடவுளின் தேசம்’ என தனது நிலத்தை வர்ணித்து, தனது மாநிலத்தில் நிலவளம், நீர்வளம், மலைவளம் என எவற்றையும் பாதுகாத்து, எவ்விதச் சுரண்டலுக்கும் அனுமதிக்காத வகையில் நிலவியல் கோட்பாட்டை முன்வைக்கும் கேரள அரசு, தமிழகத்தில் கட்டற்ற வளக்கொள்ளையில் ஈடுபட முனைவதுடன் மருத்துவக்கழிவுகளையும், பிற கழிவுகளையும்கூட தன் மாநிலத்திற்குள் கொட்டாது, தமிழக எல்லைக்குள் கொண்டுவந்து கொட்டி, தமிழகத்தைக் குப்பைத்தொட்டி போலப் பயன்படுத்துகிறது.

கேரள மாநிலத்திற்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய விளைபொருட்களை தென் தமிழ்நாட்டு விவசாயப் பெருமக்களே விளைவித்துத் தருகின்றனர். உயிர் காக்கும் உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, நோய் பரப்பும் கழிவுகளைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் கொட்டுவது எவ்வகையில் நியாயம்? மனச்சான்று உள்ள எவரேனும் இத்தகைய இழி செயலில் ஈடுபடுவார்களா? அறம் சார்ந்து இயங்கும் எந்த அரசாவது அதை அனுமதித்து வேடிக்கைதான் பார்க்குமா? தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயமும், மதுரை உயர்நீதிமன்றமும் கழிவுகள் கொட்டப்படுவதைக் கண்டித்த பிறகும் இன்றுவரை அக்கொடுமைகள் நின்றபாடில்லை.

ஆகவே, ஒட்டு மொத்த கேரள மாநிலத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் முறைகேடாக கழிவுகளைக் கொட்டும் குற்றச் செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கேரள அரசு இனியாவது தடுத்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இதுபோன்ற அடாவடித்தனங்களை தமிழ்நாடு அரசு இனியும் வேடிக்கை பார்க்காது கழிவுகளைக் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டுமெனவும், பணத்தைப் பெற்றுக்கொண்டு கழிவுப் பொருட்களைச் சுமந்து வரும் வாகனங்களை அனுமதிக்கும் எல்லை பாதுகாப்பு காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!