நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காட்டில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து, தி.மு.க. அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மூன்று தலைமுறைகளாக வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்களை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களெனக்கூறி அகற்ற முற்படுவது கொடுங்கோன்மையாகும்.
திருவேற்காட்டில் கூவம் ஆற்றுக்கு அருகில் பெருமாள் கோவில் தெரு பகுதியில் மூன்று தலைமுறைகளை கடந்து 300 குடும்பங்களாக, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கு செலுத்தி வாழ்ந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும். திராவிட திருவாளர்கள் அம்மக்களிடம் கடந்த 60 ஆண்டுகளாக வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள், இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? இத்தனை ஆண்டுகளாக அப்பகுதியில் வராத வெள்ள பாதிப்பு திடீரென்று எப்படி வரும்? காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, தி.மு.க. அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், தனியார் நிலவிற்பன்னர்களுக்கு தி.மு.க. அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்கத் திறனற்ற தி.மு.க. அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். இதுதான் தி.மு.க. அரசு கடைபிடிக்கும் சமத்துவமா? சமூக நீதியா? இதற்கு பெயர்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? என்ற கேள்விகள் எழுகிறது.
ஆகவே, ஆவடி தொகுதிக்குட்பட்ட, திருவேற்காட்டில் கடந்த மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ் தொல்குடி மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை தி.மு.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்களை இனியும் தொடராது தி.மு.க. அரசு முற்றாகக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









