தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வருகிறது. மேலும், எல்லாத் தேர்தல்களிலும் கூட்டணி வைக்காமல் தனியாகவே நின்று ஓரளவுக்குக் கணிசமான வாக்குகளைப் பெற்று வருகிறது. எனினும், அது ஓர் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது. இந்த நிலையில், அந்தக் கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இந்த நிலையில், அக்கட்சிக்கு தற்போது விவசாயி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த, 2016ஆம் ஆண்டு முதல்முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. அதைத் தொடர்ந்து, 2021-இல் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது அதே சின்னம் (கரும்பு விவசாயி) கேட்டு அக்கட்சி உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கத் தவறியதால் கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தது. அப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த கட்சி ஒன்றுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து மைக் சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 8.22 சதவீத வாக்குகளைக் குவித்தது. இதைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையமும் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த அக்கட்சிக்கு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதற்கான கடித்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தமது அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஏர் கலப்பை விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.