ஜிம் மற்றும் பார் உரிமையாளர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல்: உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!
ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிர்மல் (34) என்பவர், கிருஷ்ணா நகர் பகுதியில் ஜிம் மற்றும் பார் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, அவரது பாரில் மது அருந்த வந்த ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மதியம், நிர்மல் தனது பாரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, நயினார் கோவில் விலக்கு அருகே ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் நிர்மல் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், நிர்மலின் உறவினர்களும் கிராமத்தினரும் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவம் முன்விரோதம் காரணமாகத்தான் நடந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.