மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள வி.எஸ்.நகரத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவர் பணி நிறைவு பெற்ற போலீஸ்.இவரது மகன் ராஜா (வயது 37). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஆகாஷ், பிரியதர்ஷினி ஆகிய குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப சண்டை காரணமாக ராஜாவின் மனைவி அவரை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
ராஜா கடந்த 14-ந்தேதி குடிபோதையில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். கொலை குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரின் நண்பர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடல் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் கொலையாளி ராஜாவின் கழுத்தை அரிவாள் மனையால் அறுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். கொலையுண்ட ராஜாவின் 76 வயதான பாட்டி புத்திசிகாமணி மீது போலீசாருக்கு சந்தேகம் எழவே, அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை செய்ததில், அவர் தனது பேரனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
ராஜா, தனது பாட்டியிடம் சொத்தை கேட்டு தொந்தரவு செய்து உள்ளார். மற்ற பேரன், பேத்திகளுக்கு சொத்து கிடைக்காமல் ராஜாவே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, மது குடித்து அழித்து விடுவார் என்று எண்ணிய புத்திசிகாமணி அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று குடிபோதையில் ராஜா தூங்கி கொண்டு இருந்த போது அரிவாள் மனையால் ராஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மூதாட்டி புத்திசிகாமணியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்


You must be logged in to post a comment.