தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன், இவர் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆகவும் உள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரளான இவருக்கும் இவருடைய தம்பி சிமன்சன் என்பவருக்கும் இடையே வீட்டு சொத்தைப் பிரித்துக் கொள்வது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப் படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் இவர்களுக்கு இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன் தம்பி என்றும் பாராமல் துப்பாக்கியால் சுட்டுள்ளார், இதில் சிமன்சனின் தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டு ஓடியது. சிறிது நேரத்திலேயே சிமன்சன் அதிக ரத்தப் போக்கின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டு தப்பியோடிய பில்லா ஜெகனை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி வடபாகம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் அதனை அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்திலும் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












