மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி: 29 மாநகராட்சிகளில் மும்பை, புனே, நாக்பூர் உட்பட 25-ஐ கைப்பற்றுகிறது.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றுகிறது.
மகாராஷ்டிராவில் முதல்கட்டமாக நகராட்சிகள், பேரூராட்சிகள் என 288 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் 2-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 207 நகராட்சிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு கடந்த 15-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மாநகராட்சிகளுக்கு ஏற்ப கூட்டணிகள் மாறின. இந்நிலையில், முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மும்பை, புனே, நாக்பூர் மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக 87 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 27 வார்டுகளில் வெற்றி பெற்றது. இந்தமாநகராட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. ஆளும் பாஜக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையை எட்டி மும்பை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 62 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுமார் 30 ஆண்டுகளாக தாக்கரே குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சியில் முதல்முறையாக பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 15 வார்டுகள் கிடைத்தன.
மும்பையின் தாராவி பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்கு உள்ள 7 வார்டுகளில் 4 வார்டுகளில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, 2 வார்டுகளில் காங்கிரஸ், ஒரு வார்டில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா வெற்றி பெற்றுள்ளது. புனே மாநகராட்சியில் 165 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக 90 வார்டுகளில் வெற்றி பெற்று புனே மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. நாக்பூர் மாநகராட்சியின் 151 வார்டுகளில் பாஜக 104 வார்டுகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. தானே மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 131 தொகுதிகளில் பாஜக, ஷிண்டே அணி கூட்டணி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஒரு வார்டுகூட கிடைக்கவில்லை. இதுமட்டுமின்றி, சத்ரபதி சாம்பாஜிநகர், நாசிக், நவி மும்பை, கல்யாண்-டொம்பிவிலி உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. வசாய்-விரார் மாநகராட்சியின் 115 வார்டுகளில் பகுஜன் விகாஸ் அகாடி கட்சி 71 இடங்களை பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. பர்பானி மாநகராட்சியின் 65 வார்டுகளில் உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே கூட்டணி 36 வார்டுகளில் வெற்றி பெற்று அந்த மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
உல்லாஸ்நகர் மாநகராட்சியின் 78 வார்டுகளில் பாஜக 34, அதன் கூட்டணி கட்சியான ஷிண்டே தலைமையிலான சிவசேனா 36 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. லத்தூர் மாநகராட்சியின் 70 வார்டுகளில் காங்கிரஸ் 47 வார்டுகளில் வெற்றி பெற்று அந்த மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. பாஜக கூட்டணிக்கு 22 வார்டுகள் கிடைத்துள்ளன. மாலேகான் மாநகராட்சியின் 84 வார்டுகளில் இஸ்லாம் கட்சி 35, ஏஐஎம்ஐஎம் 20 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
ஏக்நாத் ஷிண்டே அணி 18, சமாஜ்வாதி 6, காங்கிரஸ் 3, பாஜக 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இது உட்பட சில மாநகராட்சிகளில் இழுபறி நீடிக்கிறது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும் போது, ‘‘மகாராஷ்டிராவின் 25 மாநகராட்சியில் பாஜக கூட்டணி மேயர்கள் பதவியேற்பார்கள். இந்துத்வாவும், வளர்ச்சி திட்டங்களும்தான் எங்கள் ஆன்மா. தொடர்ந்து அவற்றை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.
மும்பை மாநகராட்சியில் 1.24 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் மராத்தியர்களின் எண்ணிக்கை 38 சதவீதம். குஜராத், உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட வடஇந்திய மாநில மக்களின் எண்ணிக்கை 30 சதவீதம். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென்னிந்திய மக்களின் எண்ணிக்கை 26 சதவீதம் ஆகும். மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கூட்டணிக்கும் இடையே நேரடிபோட்டி நிலவியது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, வடமாநில, தென்மாநில மக்களை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வடமாநில, தென் மாநில மக்கள் பெரும்பாலோர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தவிர, மராத்தி மொழி பேசும் மக்களில் ஒரு பகுதியினரும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இவை உள்ளிட்ட காரணங்களால் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது சமூகவலைதளப் பதிவில், ‘மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மகாராஷ்டிர மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதற்காக மகாராஷ்டிராவுக்கு நன்றி. தேர்தல் வெற்றிக்காக இரவு,பகலாக உழைத்த தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். எதிர்க்கட்சிகளின் பொய்பிரச்சாரங்களை எங்கள் தொண்டர்கள் முறியடித்தனர். எங்களது கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









