பரமக்குடியில் அமைந்துள்ள ஆர் எம் எஸ் தபால் நிலையத்தை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். – மத்திய அமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி கோரிக்கை.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இயங்கி வரும் ஆர் எம் எஸ் தபால் நிலையத்தை மதுரை தபால் நிலையத்தோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது,

என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடியில் அஞ்சல் பிரிப்பக அலுவலகம் (ஆர் எஸ் எஸ்)1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தற்போது வரையில்  தினந்தோறும் விரைவுத்தபால் மற்றும் பதிவுத் தபால் மட்டுமே 2500 முதல் 3500 தபால்களை கையாளும் விதமாக சிறப்பாக இயங்கி வருகிறது.

பரமக்குடி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு அருகாமையில் இந்த ஆர் எம் எஸ் அலுவலகம் அமைந்திருப்பதால் தபால் பைகளை வாங்குவதற்கும் பிரித்து அனுப்புவதற்கும் வசதியாக இந்த அலுவலகம் உள்ளது. ஒருங்கிணைந்த சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது மாவட்டத்தின் மையப்பகுதி மற்றும் தபால் போக்குவரத்துக்கு வசதியாக பரமக்குடி தேர்வு செய்யப்பட்டு இங்கு அஞ்சல் பிரிப்பு அலுவலகம் தமது சேவைகளை கடந்த 38 ஆண்டுகளாக சிறப்புடன் செய்து வருகிறது.

மாலை ஐந்து முப்பது மணியில் தொடங்கி அதிகாலை ஐந்து  மணி  வரையில் பதிவுத் தபால் உள்ளிட்ட விரைவுத் தபால்கள் சாதாரண தபால்கள்  வரை இங்கு அனுப்புவதற்கான வசதிகள் உண்டு. அலுவலகங்களில் பணிபுரியும் பல பேர் தங்கள் அலுவலக வேலை நேரம் முடித்த பின்பும் மாலை நேரங்களில் தபால் அனுப்புகின்ற வசதியை ஆயிரக்கணக்கான பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

 இந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து தபால்களும் மறுநாள் தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுக்கும் சென்று சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை வசதிகள் கொண்ட இந்த  ஆர் எம் எஸ் அலுவலகத்தை மூடிவிட்டு மதுரையுடன் இணைப்பது என்பது பொதுமக்களுக்கு மாபெரும் துயரத்தை தரக்கூடியது.

எனவே இதனை கருத்தில் கொண்டு பரமக்குடியில் இயங்கி வரும் ஆர் எம் எஸ் அலுவலகத்தை தொடர்ந்து இயங்குவதற்கான வழிகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!