மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது! நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய கனிமொழி MP!

2025 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்.13 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 2 ஆவது அமர்வு இன்று தொடங்கியது.2 ஆவது அமர்வு இக்கூட்டத் தொடரின் முதல் நாளே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் ஒன்றிய அரசு பழிவாங்குகிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு.சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டை வஞ்சிப்பதா? புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மறுப்பதா? தமிழ்நாட்டுக்கான கல்விநிதி ரூ.2000 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.அப்போது பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த, தமிழ்நாடு அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. ஆனால் தற்போது, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சனை செய்கிறார்கள்” என கூறினார். இதற்கு தி.மு.க எப்.பிகள் கடும் கண்டனங்களை எழுப்பினர்.பின்னர் பேசிய கனிமொழி MP,” ஒன்றிய அமைச்சர் பேசும்போது தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டு மக்களையும் நாகரிகமற்றவர்கள் என கூறினார். இந்த பேச்சு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது.நாங்கள் கல்விக்கான நிதி தொடர்பாக ஒன்றிய அமைச்சரை சந்தித்தோம். அப்போது தமிழ்நாட்டு அமைச்சரும் உடன் இருந்தார். தேசிய கல்விக் கொள்கையில் பிரச்சனை உள்ளது. அதை எங்களால் ஏற்கமுடியாது. அதேபோல் மும்மொழி கொள்கையையும் ஏற்க முடியாது.இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமருக்கும், அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். தேசிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது. எங்களுக்கான நிதியை ஒதுக்குங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார். நாங்கள் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை” என தெரிவித்தார். இதையடுத்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என அவையில் பல்டி அடித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!