கீழக்கரை லெப்பைத் தெருவும் சார்ந்த முஹம்மது அபுல் காசிம் மகனும், நைஸ் அப்பாவின் பேரனுமாகிய முஹம்மது நிஹால் சிங்கப்பூர் புகித் மேரா பள்ளியில் கடந்த வருடம் “O level” தேர்வில் 83.4 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இவருக்கு சிறுவயதில் இருந்தே இரு காதுகளிலும் குறைபாடு உள்ளவர். இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு சமீபத்தில் பள்ளியில் இருந்து “AWARD FOR RESILIENCE” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருது வாழ்கையில் ஏற்பட்ட தடங்கல் அனைத்தையும் மீறி வாழ்வில் வெற்றியடைந்தவர்களுக்காக வழங்கப்படும் அரிய விருதாகும்.
இவர் பள்ளிக்கூட காலத்தில் பல வேதனைகளை சந்தித்து இப்பொழுது சிங்கப்பூரில் உள்ள பாலிடெக்னிக்கில் உயர் படிப்புக்காக சேர்த்துள்ளார்.
முஹம்மது நிஹால் தன்னுடைய பள்ளி காலத்தை நினைவு கூறுகையில் “எனக்கு ஆரம்ப காலத்தில் இந்த குறைபாடுடன் பள்ளிக்கு செல்வது பயமாகத்தான் இருந்தது. சில நண்பர்கள் கேலியும், கிண்டலும் செய்வார்கள், ஆனால் அதிலும் சில நண்பர்கள் எனக்கு துணை நின்று எனக்காக மற்றவர்களிடம் போராடியது மறக்க முடியாது. நான் பள்ளி காலத்தில் சில நேரங்களில் காது கேட்கும் கருவி பழுதடைந்த நேரங்களில், நண்பர்களே என்னை முன்னால் உட்கார வைத்து பாடங்களை எழுதி தருவார்கள். இதற்கு எனக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்தவர் பள்ளியின் ஆசிரியை ஃபெய்த் நிக், என் பள்ளி காலத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்” என்றார்.
இம்மாணவரை பற்றி பள்ளி ஆசிரியை கூறுகையில் “எனக்கு அவருக்கு காது கேளாமை இருப்பது எனக்கு தெரியும், ஆனால் அவர் என்னிடம் கூறியது கிடையாது. ஆனால் இன்று அவரை சார்ந்து மற்றவர்கள் இருக்க முடியும் என்ற நிலைக்கு உயர்ந்திருப்பது மகிழ்வை தருகிறது” என்றார்.
இறுதியாக முஹம்மது நிஹால் கூறுகையில் “என்னைப் போன்ற மாற்று திறனாளிகள் என்றுமே கவலைப்படத் தேவையில்லை, நம்மை போன்றவர்களுக்கு நண்பர்களின் உதவி இருக்கும்” என்று நன்றி மறவாமல் கூறினார்.
முஹம்மது நிஹால் நிச்சயமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அல்ல. சாமானிய மனிதனுக்கும் தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையாகாது.




Interesting