நிதீஷ் குமாரின் அநாகரிக வன்செயலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை;
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், பொது வெளியில் ஒரு பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்து அவமதித்த சம்பவம், இந்தியாவின் ஜனநாயக, அரசியல் மற்றும் நெறி மதிப்பீடுகளுக்கு எதிரான வன்முறையாகும்.
ஒரு பெண்ணின் உடை, குறிப்பாக அவளது மத நம்பிக்கையின் அடையாளமாக உள்ள ஹிஜாப், அவளது தனிப்பட்ட உரிமையும் மரியாதையும் ஆகும். அந்த உரிமையை, அதுவும் ஒரு முதலமைச்சர் போன்ற பதவியில் இருப்பவர், பொது மேடையில் மீறுவது பெண்களின் மரியாதையைச் சிதைக்கும் செயலாகவும், மதச் சுதந்திரத்தை அவமதிக்கும் அநாகரிகமாகவும் பார்க்கப்பட வேண்டும்.
இந்த அநாகரிக வன்செயல் மூலம் பெண்களின் பாதுகாப்பும் மரியாதையும் கேள்விகுறியாகியுள்எது. அவரது இழிச்செயல் அரசியல் அதிகாரத்தின் மோசமான துஷ்பிரயோகமாக உள்ளது. முஸ்லிம் பெண்களைக் குறிவைக்கும் இழிவான மனநிலையின் வெளிப்பாடாக விளங்குகின்றது.
இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் மத சுதந்திரம், தனிநபர் மரியாதை, உடை அணியும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்கிறது. அந்த அரசியலமைப்பு மீது உறுதி பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதலமைச்சர் இப்படியான செயலை செய்வது அவர் அப்பதவிக்குத் தகுதியானவர் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றது. நிதீஷ் குமார் உடனடியாகப் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் அந்தப் பெண் மருத்துவருக்கு முழுமையான நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் உடல், உடை, நம்பிக்கை ஆகியவற்றின் மீது அதிகாரம் செலுத்தும் மனப்பான்மைக்கு எதிராக இந்த நாடு முழுவதும் ஒருமித்த கண்டனம் எழ வேண்டும். முஸ்லிம் பெண்கள் யாருடைய இரக்கத்திலும் வாழ வேண்டியவர்கள் அல்ல; அவர்கள் அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட சம உரிமை கொண்ட குடிமக்கள் நிதீஷ் குமாரின் இந்த அராஜகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மன்னிப்பு கோராவிட்டால் வீதிக்கு வந்து ஜனநாயக ரீதியில் போராடுவோம்.


You must be logged in to post a comment.