நமது உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும்:-காணொளி கருத்தரங்கில் மு.தமிமுன் அன்சாரி MLA உரை!
அம்பேத்கார், பெரியார், மார்க்ஸ் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இணையதள கருத்தரங்கில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ‘உரிமைக் குரல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் தமிழகம் மற்றும் கடல் கடந்து உலகம் முழுக்க வாழும் தமிழர்களும் காணொளி வழியில் இணைந்தனர்.
ஊரடங்கின் 45 வது நாளை முன்னிட்டு, ஒரு மணி நேர உரையும், ஒரு மணி நேர கேள்வி-பதிலுமாக இந்நிகழ்வு உற்சாகமாக அமைந்தது.
இதில் அவர் பேசியதின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு..
உணர்வாளர்கள், சித்தாந்தவாதிகள் இணைந்திருக்கும் இந்நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.
உலகம் இதுவரை சந்தித்திடாத ஒரு நெருக்கடியை நமது காலத்தில் சந்திக்கிறோம். இதற்கு முன்பு உலகில் இது போன்ற கொள்ளை நோய்கள் பரவியதுண்டு.பேரழிவுகளை சந்தித்ததும் உண்டு.
அவை ஒரு தீவு, ஒரு நாடு, ஒரு கண்டம் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் கொரணா தொற்றுதான் ஒரே நேரத்தில் உலகையே ஊரடங்கில் வைத்திருக்கிறது.
மனித வரலாற்றில் இப்படியொரு நெருக்கடியை இப்போதுதான் எதிர்கொள்கிறோம்.
இது இயற்கையான நோயா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுத நோயா? என்ற ஐயங்களும் இருக்கிறது.
எப்போது இது முடிவுக்கு வரும் என்ற கவலையும் இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் வரை இது நீளலாம் என்றே கருதுகிறேன்.
கல்வி, பொருளாதாரம், வணிகம் என எல்லாம் இவ்வருடம் பாதிப்புக்குள்ளாகிறது.
2020 ஐ எல்லோரும் ஒரு fancy எண்ணாக கருதினார்கள்.
அப்துல் கலாம் இந்தியா 2020 ல் வல்லரசாக வேண்டும் என கனவு கண்டார். மலேஷிய முன்னாள் அதிபர் துன் மஹாதீர் அவர்களும் தன் தூர நோக்கு திட்டத்திற்கு 2020 என்றுதான் இலக்காக திட்டமிட்டார்.
பல நாடுகள், அமைப்புகள், நிறுவனங்கள் 2020 ஐ இவ்வாறுதான் கருதின.
அவற்றுக்கெல்லாம் நேர் மாறான முடிவுகளை 2020 தந்துள்ளது.
இதிலிருந்து மீள போராட வேண்டியுள்ளது.
நமது நாட்டில் மத்திய அரசு கொரணா நெருக்கடியை பொற்காலமாக கருதுகிறது.
இந்த நெருக்கடிகளின் வழியே தனது Rss ஆதரவு திட்டங்களையெல்லாம் செயல்படுத்த துடிக்கிறது.
மாநிலங்களின் உரிமைகளை எல்லாம் பறித்து, அதிகாரத்தை மத்தியில் குவிக்க திட்டமிடுகிறது.
அவர்கள் மக்கள் ஊரடங்கில் இருக்கும் பலஹீனமான சூழலை தங்களுக்கு ஏதுவாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அதில் ஒன்று தான்,உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய அரசின் நீராற்றல் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என அறிவித்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான உரிமை பறிப்பாகும். காவிரி நீரில்தான் 20 மாவட்ட மக்கள் பலன் பெறுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது என்றே போராடுகிறோம்.
ஏற்கனவே நீட் தேர்வினால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.கிராமப்புற மற்றும் எளிய மக்களின் மருத்துவர் கனவுகள் தகர்க்கப்பட்டுள்ளன.
இப்போது கலைக்கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு என அறிவித்திருக்கிறார்கள். நாமெல்லாம் சாதாரணமாக BA, B.com, B.sc என படித்து அதிகாரத்திற்கு வந்தோம்.அரசு வேலைகளுக்கு வந்தோம். தனியார் நிறுவனங்களில் சேர்ந்தோம். நமது வாழ்க்கை தரம் உயர்ந்தது. சமூக மாற்றங்கள் நிகழ்ந்தது.
இப்போது அதற்கும் ஆபத்து வந்திருக்கிறது. இனி +2 விலேயே வடிகட்டலை தொடங்கி விடுவார்கள்.
+2 வுக்கும் படிக்க வேண்டும், நுழைவுத் தேர்வுக்கும் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாகும்.Teaching முக்கியமா?Coaching முக்கியமா? என்ற நிலை உருவாகும்.
டியுஷனுக்கு தனி செலவு செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின,தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கும், கிராமப்புற பிள்ளைகளுக்கும் இனி கலைக் கல்லூரி படிப்பு என்பதும் அரிதாகி விடும்.
இவர்கள் எல்லாம் படித்து விட்டு வருவதால்தான், இட ஒதுக்கீடு மூலம் அதிகாரத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு உயர் படிப்பே இல்லாமல் செய்து விட்டால், இட ஒதுக்கீடு மூலம் அதிகாரங்களுக்கு வருவது குறைந்து விடும் என்பது அவர்களின் நச்சு சிந்தனையாகும்.
உலக நாடுகள் எல்லாம் தங்கள் மக்கள் படிக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்கள். இங்கே எல்லோரும் படிக்க கூடாது என்பதற்காக திட்டம் போடுகிறார்கள்.
நம் தமிழகத்தில் காமராஜர், MGR, டாக்டர் அம்மா , கலைஞர் ஆகியோர் மதிய உணவு, இலவச சீறுடை, இலவச காலணி, இலவச சைக்கிள் ,இலவச பாடநூல்கள், இலவச மடிக்கணினி என வழங்கி எல்லோரும் படிக்க வேண்டும் என திட்டங்களை போட்டார்கள்.
இந்த மத்திய மோடி அரசு குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாக கொண்டு வரும் முயற்சிகளை செய்கிறது.
அவர்கள் கொண்டு வந்திருக்கும் புதிய கல்வி கொள்கையின் நோக்கமும் அது தான்.
இப்போது மத்திய அரசு புதிய மின்சார கொள்கையை திணிக்கிறது.
இனி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காது. 100 யூனிட் வரை இருந்த சலுகையும் இனி நமக்கு கிடைக்காது.
நெருக்கடியான இத்தருணத்திலும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
இதன் மூலம் தனியார் நிறுவனங்களை லாபமடையச் செய்கிறார்கள்.
கார்ப்பரேட் முதலாளிகளின் 68 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மிகவும் ஏழைகள் அல்லவா?
விவசாயிகளையும், சிறு, குறு கடன் பெற்றவர்களையும் மிரட்டி கடனை வசூலிக்கிறார்கள். ஆனால் தப்பியோடும் கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கிறார்கள்.
MP க்களின் நாடாளுமன்ற நிதியை அவர்களிடம் கேட்காமலேயே மத்திய அரசு பறித்திருக்கிறது.
பெருநிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 2 சதவீதத்தை அந்தப் பகுதி மக்களின் நல்வாழ்வுக்கு கொடுக்க வேண்டும் என்பது விதி. அதை மாநில அரசுகளுக்கு கூட கொடுக்க விடாமல்,அதை pm Care fund க்கு தான் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். 1949 முதல் நடைமுறையில் இருந்த பிரதமர் நிவாரண நிதிக்குதான் முறைப்படி போக வேண்டும். அது இப்போது மாற்றப்படுகிறது.
மாநிலங்களுக்கு வருகை தந்து,கொரணா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு பார்வையிடும் என்பது, மத்திய அரசே எல்லாம் செய்வது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகும்.
ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை கூட மத்திய அரசே வாங்க வேண்டும் என்கிறார்கள்.
மாநிலங்கள் கேட்கும் நிதி ஒதுக்கீட்டை தர மறுக்கிறார்கள்.
இன்றைய அகில இந்திய அரசியலில் VP சிங், ஜோதிபாசு, ஜெயலலிதா அம்மா, கலைஞர், ND ராமராவ் போன்ற ஆளுமைகள் இல்லாமல் போனது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
மம்தா பானர்ஜியால் ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியவில்லை.
லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருக்கிறார். முலாயம் சிங் யாதவ் உடல் இயலாமையில் உள்ளார்.
இவையெல்லாம் மோடிக்கும், பாஜகவுக்கும் வசதியாக போய்விட்டது.
இந்த நெருக்கடியான நிலையிலும் கூட மத்திய பாஜக அரசு, மக்களுக்கு நேரடி நிவாரணம் வழங்கவில்லை.
ஒரு ரேஷன் அட்டைக்கு , தலா ஐந்தாயிரம் ரூபாயை 100 கோடி பேருக்கு கொடுத்தால் 5 லட்சம் கோடிதான் செலவாகும்.
GST மூலம் குவித்த வரி வருவாய் மத்திய அரசிடம் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கலால் வரி மூலம் 20 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு தேவையான உணவு தாணியங்கள் கிடங்குகளில் கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இந்த நேரத்தில் கூட மக்களுக்கு உதவி செய்யாவிட்டால் எப்படி?
எனவே இது பற்றி எல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும்.
நமது உரிமைகள் பறிக்கப்படுவதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
அவரது உரை நல்ல வரவேற்பாக இருந்ததாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லூர்து சாமி கூறினார்.
நிகழ்ச்சிக்கு பிறகு பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் அவரை தொடர்புக் கொண்டு, அவரது கருத்துக்களை வரவேற்றனர்.
பிரான்ஸ் க்கு ஒரு முறை வருகை தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்காளர்கள் என பலரும் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









