பிழை வழக்கு (மிஸ்டேக் ஆப் பேக்ட் – MISTAKE OF FACT) என்றால் ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR( Community Service Register) எனப்ப்டுகின்ற “மனு ஏற்புச் சான்றிதழ்” அளிக்க வேண்டும்.
அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 – பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். புகார் அளித்த நபருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும்.
ஒரு வேளை கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 – (Cr.P.C) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேற்கண்டவாறு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ், நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம்.
அந்த குற்ற வழக்கினைப் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றமானது உத்தரவிட முடியும். இதனையே நாம் கோர்ட் டைரக்ஷன் என்கிறோம். நீதிமன்ற உததரவுக்குப் பின், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157ன் கீழ் அந்த வழக்கை காவல்துறை அதிகாரி புலனாய்வு செய்து நீதிமன்ற நடுவருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இது போன்ற புலனாய்வு வழக்குகளில் இரண்டுக்கு மேலான குற்றங்கள் செய்யப்பட்டிருந்து, அவற்றில் ஏதேனும் ஒரு குற்றம் கைது செய்யப்படக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த வழக்கானது குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 155(4)ன் கீழ் கைது செய்யப்படக்கூடிய வழக்காக (புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரி/அலுவலர்) எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவசியம் ஏற்பட்டால், நடுவரின் அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்யவும் விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. ஒருவேளை புலனாய்வு செய்வதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று விசாரணை அதிகாரிக்கு தோன்றினால், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(1)ஆ-ன் கீழ் அந்த வழக்கை அவர் புலனாய்வு செய்யக் கூடாது. இதனையே ”பிழை வழக்கு” (Mistake of Fact) என்கிறார்கள்.
அதே நேரத்தில் ஒரு வழக்கை புலனாய்வு செய்வதாக இல்லை என்பதை குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(2)ன் கீழ், புகார் அளித்தவர்க்கு விசாரணை அதிகாரி உடனடியாக அறிவிக்க வேண்டும். காவல் நிலை ஆணை (POLICE STANDING ORDER) 660ன்படி ”பிழை வழக்கு” (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்ட பின், விசாரணை அதிகாரியானவர், புகார் அளித்தவர்க்கு (காவலர் படிவம் எண்:90ல்) வழக்கு பற்றிய அறிவிப்பு ஒன்றை செய்ய வேண்டும்.
புலனாய்வை முடித்த பிறகு நீதிமன்ற நடுவருக்கு விசாரணை அதிகாரி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(2)ன் கீழ், அறிக்கை அனுப்ப வேண்டும். அதன் பிறகு நீங்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணை அதிகாரியால் பிழை வழக்கு (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,இது பற்றி ஏதேனும் கூற விரும்பினால். நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நாளில் நீங்கள் முறையிடலாம்! என்று புகார் தந்தவர்க்கு நீதிமன்ற நடுவர் சம்மன் அனுப்புவார்.
உங்கள் வழக்கைப் பற்றி பொய்யான சாட்சியினை காவல்துறை அதிகாரி/அலுவலர் புனைந்தால், அது பற்றிய ஆதாரங்களோடு இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-193ன்படி அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர் மீது நீதிமன்றத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் நிரூபிக்கப்பட்டால், அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கப்படும்.
உங்கள் வழக்கின் விசாரணை அறிக்கையில் எந்தக்கட்டத்திலும் அறிக்கை, கட்டளை, தீர்ப்பு அல்லது சட்டத்திற்கு முரணான எதையும் செய்திருந்தால், இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-219ன்படி அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர் மீது நீதிமன்றத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் நிரூபிக்கப்பட்டால், அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கப்படும்.
தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









