பா.ஜ.க-வில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? – செந்தில் பாலாஜி கேள்வி.
பா.ஜ.க-வில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: “தமிழக முதல்வர், எந்த காலத்திலும் குறிப்பாக மின்வாரியம் சம்பந்தமாக அதானியை சந்திக்கவில்லை என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு பிறகும் அந்த அறிக்கை குறித்து கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. ஒன்று ஒரு முறை படித்து தெரிந்திருக்கலாம். படித்து புரியவில்லை என்றால் பலமுறை படித்து யோசித்திருக்கலாம். புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் விளக்கத்தை கேட்டு, சரி பண்ணி கொள்ளலாம். படித்தும் புரியவில்லை, தெரிந்தவர்களிடம் கேட்டும் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை. அந்தளவுக்கு அறிவுத்திறனும் இல்லை.
ஒரு கருத்தை பேசும் போது, மாற்றுக் கருத்தை முன் வைக்கிறோம். இந்த 3 ஆண்டுகளில் அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான வர்த்தக தொடர்புகள் இல்லை என தெளிவாக கூறியுள்ளோம். பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சராகவில்லையா? அவர்கள் சொல்லக்கூடிய குற்றசாட்டு என்பது ரூ.7.01 மின்சாரம் வாங்கியது. இது கடந்த ஆட்சியில் போடப்பட்ட மின் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிதி என்பது உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. நாங்கள் தடையாணை கேட்டோம். வழங்கப்படவில்லை. அதனால், அந்த நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் ஒப்பந்தம் போட்டதை போல, எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டதை போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி ஒரு போதும் எடுபடாது, அது மக்களுக்கு தெளிவாக தெரியும். தமிழக முதல்வர் வழங்கக்கூடிய சிறப்பு திட்டங்களையும், பொற்கால ஆட்சியையும் மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் வென்று தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்கள் இது மக்கள் மனதில் வைத்திருக்க கூடிய அன்பு, பாசம். இதுதான் யதார்த்த நிலை.
மக்களிடத்தில், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தக் கூடிய தமிழக முதல்வரை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து மக்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஆதரவை மக்கள் வழங்குவார்கள். 2026 தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.
You must be logged in to post a comment.