திமுக அரசின் திட்டங்களை காப்பி அடித்துத் தேர்தல் வாக்குறுதியாகத் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாகப் பாராட்டியிருக்கிறார். அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து திட்டம், அனைவருக்கும் வீடு என திமுக அரசின் திட்டங்களையே வழிமொழிந்திருக்கிறார்; பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம், நகரப் பேருந்துகளில் விலையில்லாமல் பயணம் செய்யும் மகளிர் விடியல் திட்டம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றுக்கு அதிமுக நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் மிகப் பெரிய தாக்கத்தை இந்தத் திட்டங்கள் ஏற்படுத்தியிருப்பதை, எதிர்க் கட்சித் தலைவர் உணர்ந்திருப்பதன் தாக்கம்தான் இப்போது அந்த திட்டங்களையே காப்பி அடித்துத் தேர்தல் வாக்குறுதியாகத் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்குக் கட்டணமில்லா பயணம், மாதந்தோறும் ரூ.1000 போன்ற வாக்குறுதியைத் தந்து திமுக ஆட்சிக்கு வந்தபோது, கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாகப் பேசினார் பழனிசாமி. “குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துக் கடத்துவது போல், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றியது’’ என்றெல்லாம் பேசிய பழனிசாமியின் நாக்குதான் இப்போது அதே திட்டங்களையே வாக்குறுதி என உருமாற்றிப் பேசுகிறது.
புதிதாக எதையும் வாக்குறுதியாகத் தர இயலாத பரிதாப நிலைக்கு போய்விட்ட பழனிசாமி திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே “காப்பி பேஸ்ட்” வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுகிறது.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயன்பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லலாம். பெண்கள், மாணவர்கள், முதியோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்குமானத் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருவதால் திராவிட மாடல் ஆட்சி 2.o உறுதியாகிவிட்டதை எடப்பாடி பழனிசாமியே எம்.ஜி.ஆர் மாளிகையில் அமர்ந்து சங்கநாதம் செய்திருக்கிறார்
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி வருவதால் ஒட்டுமொத்தப் பெண்களும் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் அச்சமடைந்திருக்கும் பழனிசாமி, வெறும் குழப்பத்தையாவது ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மகளிருக்கு 2000 ரூபாய் தருவதாகப் பொய்யாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
பழனிசாமி அளித்த இந்த வாக்குறுதிகளின் லட்சணம் எப்படி இருக்கும் தெரியுமா? கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ’வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்குச் சிறப்பு நிதி உதவியாகத் தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்’ என 2019 பிப்ரவரி 12-ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார் எடப்பாடி. 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை, 2019, மார்ச் 4-ம் தேதி தலைமைச் செயலகத்தில் வெறும் 32 பேரின் குடும்பங்களுக்கு மட்டும் வழங்கி தொடங்கியும் வைத்தார். இதன்மூலம் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் பணம் வந்து சேரும் என மக்களை ஏமாற்றினார். ஆனால், யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. ‘’தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பணம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் 2,000 ரூபாய் வழங்கப்படும்’’ எனத் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார் பழனிசாமி. பழனிசாமி ஆட்சியை விட்டு இறங்கும் வரையிலும் அந்த 2,000 ரூபாய் யாருக்கும் போய்ச் சேரவில்லை. இதில் கொடுமை என்ன தெரியுமா? 2,000 ரூபாய் திட்டத்துக்கு விழாவெல்லாம் நடத்தி விளம்பரமெல்லாம் செய்தார்கள். அந்த விழாவுக்குத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டதற்குக் கட்டணமாக 1 கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 390 ரூபாய் செலவிட்டு மக்களை ஏமாற்றினார்கள்.
2019-ல் ஒரே ஒரு தவணையாக 2 ஆயிரம் ரூபாயை ஆட்சியில் இருந்த போது தராத பழனிசாமியா, அடுத்து ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயை வழங்குவார்?. ஆட்சியில் இருந்த போதே 2 ஆயிரம் ரூபாயைத் தராமல் ஏமாற்றிய பழனிசாமிதான், இப்போது ஆட்சிக்கு வருவதற்காக ஏமாற்றப் பார்க்கிறார்.
2021-ல் திருச்சி சிறுகனூரில் திமுக அறிவித்த “ஸ்டாலினின் 7 வாக்குறுதிகள்” என்ற 10 ஆண்டுக் காலத் தொலைநோக்கு திட்டத்திற்கான வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத் தொகை இடம்பெற்றிருந்தது. ஆனால், 24.04.2022 அன்று ஊடகத்திற்குப் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, “கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிட்டு திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்ற முடியாது” என்று கூறினார்.
நடக்காது என்று பழனிசாமி சொன்னதை நடத்திக் காட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்போது பழனிசாமி “மகளிருக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் தருகிறேன்” என்று சொல்லியிருப்பது வடிவேல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ’’அது வேற வாய்… இது நாற வாய்’’ என்பது போலத்தான் உள்ளது.
“நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று இரண்டாவது வாக்குறுதி கொடுத்திருக்கிறார் பழனிசாமி. மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தை திமுக ஆட்சி செயல்படுத்திய போது, அதற்கான பேருந்துகளைப் பாமரர்களும் எளிதாக அறியும் வகையில் பிங்க் வண்ணத்தைப் பூசியது போக்குவரத்துக் கழகம். அப்போது விடியல் பயணத்திட்டப் பேருந்துகளை “லிப்ஸ்டிக் பஸ்கள்” என கிண்டலடித்து, பெண்களைக் கொச்சைப்படுத்தியவர் பழனிசாமி.
மகளிருக்கு 2 ஆயிரம், ஆண்களுக்கு விலையில்லா பேருந்துப் பயணம் வரிசையில்தான் வீடில்லாத ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகளைக் கட்டி வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தையும் அம்மா இல்லத் திட்டம் என நகலெடுத்திருக்கிறார் பழனிசாமி.
பழனிசாமி அறிவித்திருப்பதிலேயே மிகப்பெரிய நகைச்சுவை நூறு நாள் வேலைத்திட்டத்தை நூற்றைம்பது நாளாக உயர்த்துவாராம், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கே குழி பறிக்கும் பாஜகவின் புதிய சட்டத்தை ஆதரித்த துரோகி பழனிசாமி தன்னை ஏமாற்றிக் கொள்ளலாமே தவிரத் தமிழ்நாட்டு மக்களை ஒருநாளும் ஏமாற்ற முடியாது.
எம்.ஜி.ஆர் மாளிகை பரணில் இருக்கும் அதிமுகவின் 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள் பழனிசாமி. அதில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு? என மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.
தென் தமிழகத்தில் ஏரோ பார்க், 10 ஆடை அலங்காரப் பூங்காக்கள், மின்னணு ஆளுமையின் கீழ் போலீஸ் ஸ்டேஷன்கள், ஆடை அலங்காரச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு செல்போன், கேபிள் டி.விக்கு இலவச செட்-டாப் பாக்ஸ், பொது இடங்களில், இலவச’வை-பை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டர் மினரல் வாட்டர், லேப்டாபுடன் இலவச இண்டர்நெட், ஐந்து கோடி ரூபாயில் அம்பேத்கர் அறக்கட்டளை, ரூ.100 கோடியில் அம்மா ஈடு உத்தரவாத நிதியம், கோ-ஆப்டெக்ஸில் துணி வாங்க ரூ 500 வெகுமதி கூப்பன் என்றெல்லாம் வாரி வழங்கிய வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனது தோல்வியை உணர்ந்து கொண்ட வெளிப்பாடுதான் பழனிசாமி வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகள். பொதுவாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் அறிக்கையில்தான் வாக்குறுதிகளைக் கட்சிகள் தரும். தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், முந்திக் கொண்டு வந்து ஏன் பழனிசாமி வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்? திராவிட மாடல் அரசு, மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் அடிமட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ’’எங்குப் பார்த்தாலும் மக்களிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றித்தான் பேசிக்கிறாங்க’’ என நிர்வாகிகள் எல்லாம் பழனிசாமியிடம் புலம்பிய பிறகுதானே திடீரென இந்த வாக்குறுதிகளை வெளியிடும் யோசனைக்கு பழனிசாமி வந்திருக்கிறார்.
அதிமுகவிடம் எந்தப் புதிய யோசனைகளும் இல்லை என்பதையே பழனிசாமியின் வாக்குறுதிகள் காட்டுகின்றன. மக்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லாமல் திமுகவின் திட்டங்களையே காப்பியடிக்கும் கையறு நிலைக்குச் சென்றுவிட்ட பழனிசாமியின் இந்தப் பம்மாத்து நாடகத்தை மக்கள் யாரும் நம்பப் போவதில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









