இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் காக்குடி கிராமத்தின் அருகே குண்டாற்றின் குறுக்கே ரூ.380.15 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்பணை கட்டும் பணியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் துவக்கி வைத்தார்.
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது: ராமநாதபுரத்தில் 25.11.2017ல் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வரிடம் நான் வைத்த கோரிக்கையின் பயனால் குண்டாற்றில் காக்குடி கிராமம் அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கான திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டு ரூ.380.15 இலட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு இன்று பணி துவங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் காக்குடி கிராமம் அருகே புதிதாக 85 மீ நீளத்திற்கு கட்டப்படும் தடுப்பணைக்கு கீழ் ஆற்றுப்படுகையில் சுமார் 180 மீ நீளத்திற்கு படிந்து உள்ள மண்மேடுகளை அகற்றி மேடு பள்ளங்களை ஆற்றின் படுகை மட்டத்திற்கு சமப்படுத்தி, 1200 மீ நீளத்திற்கு முட்புதர்கள் அகற்றப்பட்டு இருபுறமும் வெள்ளக்கரைகள் அமைக்கப்படவுள்ளது. ஆக்கிரமிப்புகளை தடுக்கும் பொருட்டு நில அளவை செய்து எல்லை கற்கள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கமுதி வட்டத்தில் உள்ள காக்குடி, கமுதி, மரக்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்திலுள்ள முத்துராமலிங்கபுரம் கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம் பெருகும். இத்திட்டத்தின் மூலம் 9 குடிநீர் கிணறுகள் மற்றும் 40 விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதன் மூலம் 709.47 ஏக்கர் நிலம் பாசன வசதி உறுதி செய்யப்பட்டு விவசாய உற்பத்தி பெருகி மேற்கண்ட கிராம விவசாயிகள் பயனடைவர் என பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ஆர்.விஸ்வநாத் (குண்டாறு கோட்டம்), உதவி செயற்பொறியாளர்கள் க.ராமமூர்த்தி (கமுதி), எஸ்.குணசேகரன் (முதுகுளத்தூர்), இளநிலை பொறியாளர் வி.இராமநாதபுரம் உதவி பொறியாளர் எஸ்.செல்வராஜ் உட்பட அரசு அலுவலர்களும் கிராம பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












