கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் இயங்கி வந்தது. இதற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும். அது வரை வாடகையின்றி செயல்பட, அரசு கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கழுகுமலையில் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார மையம் வேறு புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டதால், அந்த இடத்துக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலகம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் திறப்பு விழா இன்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலகத்தை திறந்து வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் மாவட்ட அலுவலர் ரா.ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அனைத்து மாநிலங்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு பேரணியில் தமிழகத்திலிருந்து செய்தித்துறை சார்பில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. 1978-ம் ஆண்டுக்குப் பின்பு தற்போது தான் இந்த பரிசு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிக்கு அவரது சொந்த ஊரான கோவை வையம்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை அவரது பிறந்த தினமான பிப்.6-ம் தேதி தமிழக முதல்வர் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தைப் பெறுகின்ற வகையில் தமிழ் அரசின் செயல்பாடுகள் உள்ளன.
எப்போதுமே தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். தேசிய கட்சிகளை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. அங்கு திமுக தலைமை வைக்கிறது. அதேபோல் அதிமுகவை தலைமையாக ஏற்கும் கட்சிகளுடன் தான் அதிமுக கூட்டணி வைக்கும், என்றார் அவர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









