கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா நாட்டுக்கோழி, கறவை பசுக்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி மற்றும கறவை பசுக்களை வழங்கி பேசினர். இதில் 30 பயனாளிகளுக்கு ரூ.1,87,500 செலவில் நாட்டுக்கோழிகளும், 45 பயனாளிகளுக்கு ரூ.18,11,250 செலவில் கறவை பசுக்களும் வழங்கப்பட்டன.
பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.50 கோடி செலவில் கிராமப்புறங்களில் உள்ள மகளிர்கள் 77 ஆயிரம் பேருக்கு 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் நாமக்கல், சேலம், தொடர்ந்து 3வது மாவட்டமாக தூத்துக்குடியில் இந்நிகழ்ச்சி நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை ஏற்கனவே 450 பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்க உள்ளோம். அதே போல் 2400 மகளிர்களுக்கு நாட்டுக்கோழிகள் வழங்கப்பட உள்ளது. சுமார் 3000பேருக்கு விலையில்லா வெள்ளாடுகளை ஆகியவை பிப்.15-ம் தேதிக்குள் வழங்கப்படும்.
கறவை பாலுக்கான விலை குறைவாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நிவாரணம் பெற்று தரப்படும்.
தமிழகத்தை பொருத்தவரை காங்கேயம், நாட்டு இன காளைகளின் விந்து எடுப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியாக விந்து உற்பத்தி நிலையம் உள்ளது. அதே போல, காங்கேயம் இன காளைகளை உற்பத்தி செய்வதற்காக விந்து எடுக்க சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் பகுதியில் ரூ.2.5 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. நாட்டு இனங்களை பொருத்தவரை, ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டங்கள் என ஆங்காங்கே உறை விந்துகள் தயார் செய்து கொண்டிருக்கிறோம். நாட்டு இன உறை விந்துகள் மிக அதிகளவு உள்ளது. தெலங்கானா மாநிலத்துக்கு கூட இங்கிருந்து தான் அனுப்பி கொண்டிருக்கிறோம். நாட்டு இன காளைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சேலம் மாவட்டத்தில் 1600 ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை பூங்கா தொடங்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே தமிழகத்தில் 2300 கால்நடை கிளை நிலையங்கள் உள்ளன. இந்தாண்டு 125 கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 100 கிளை நிலையங்கள் மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, இயங்கி வருகிறது. வரும் காலங்களில் கிளை நிலையங்கள் மருந்தகங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.
அனைத்து கால்நடை மருந்தகங்களையும் கணினி மூலம் இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு கால்நடை மருந்தக பகுதியிலும் கறவை பசு பெற்றவர்கள், நாட்டுக்கோழிகள், வெள்ளாடுகள் பெற்ற பயனாளிகள் பெற்றவர்களின் விபரங்கள், இந்த கால்நடைகள் எத்தனை குட்டிகள் ஈன்றுள்ளன போன்ற விபரங்கள் கணினி வாயிலாக உடனடியாக தெரிந்து கொள்ளலாம், என்றார் அவர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









