.திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று (04.01.2025) நடைபெற்ற 57-வது தேசிய நூலக வார விழாவில் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 57-வது தேசிய நூலக வாரவிழா, இளைஞர் இலக்கிய திருவிழா மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, நன்கொடையாளர்களை பாராட்டி விழாப் பேருரையாற்றினார். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் 2000 ஆம் ஆண்டு 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவிய வெள்ளி விழாவினை முன்னிட்டு திருக்குறளைப் பரப்பும் வகையில் புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடிவினா ஆகிய நிகழ்ச்சிகளை டிசம்பர் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட தமிழ்நாடு அரசு ஆணைப்பிறப்பித்து இருந்தது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டத்துடன் இணைந்து டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. 57 வது தேசிய நூலக வார விழா போட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, ஓரங்க நாடக போட்டி, படம் பார்த்து கதை எழுதும் போட்டி, பேச்சுப்போட்டி, வினாடிவினா போட்டி மற்றும் கவிதை போட்டி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா போட்டிகளில் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, வினாடி வினாப் போட்டி என நடைபெற்ற மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் என முதல் பரிசு ரூ5,000/-மும், இரண்டாம் பரிசு ரூ3,000/- மும், மூன்றாம் பரிசு ரூ.2,000/ மும் மற்றும் சிறப்புப் பரிசு என 10 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இளைஞர் இலக்கிய விழா என நடைபெற்ற பத்து போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கல்லூரிக்கு ரூ1,20,000/- வீதம் இரண்டு கல்லூரிகளுக்கு ரூ.2,40,000/- வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ5,000/- இரண்டாம் பரிசு ரூ4,000/- மூன்றாம் பரிசு ரூ3,000/- என ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரியின் 30 மாணவிகள், சீதாலெட்சுமி இராமஸ்வாமி மகளிர் கல்லூரியின் 30 மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட மைய நூலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள பல்வகைக்கூடத்தின் மேற்கூரைக்கு false ceiling ரூ.2.5 இலட்சம் மதிப்பில் அமைத்து கொடுத்த CKR Public Charitable Trust வழக்கறிஞர் தலைவர் ஆர்.இராஜ்குமார் , மாவட்ட மைய நூலக பெரும் புரவலராக குடும்பத்தில் உள்ள அனைவரையும் இணைத்து ரூ30,000/- வழங்கிய வி.என்.குருராஜன் ஆகியிருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேடயம் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், மண்டலத்தலைவர் மதிவாணன், கவிஞர் நந்தலாலா, வாசகர் வட்டத்தலைவர் வீ.கோவிந்தசாமி, நூலகர்கள், புரவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.