“தொடங்கியது கன(தொடர்)மழை.!, வருகிறது அதிதீவிர கனமழை..! கவனமாக செயல்படாவிட்டால் ஏற்படும் மிகப்பெரும் பிழை..!! -பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெச்சரிக்கை.
பொதுமக்கள் உறங்கும் நள்ளிரவு நேரத்தில் கண்விழித்து, அவர்கள் காலையில் எழுந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகும் கூட அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் அயராது பாடுபட்டு வரும் எனதருமை பால் முகவர்களே, பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களே, பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் உற்பத்தியாளர்களே அனைவருக்கும் வணக்கம்.
புயல், மழை, வெள்ளம், மூடுபனி, கடுங்குளிர் என காலமாற்றம் எதுவாகினும், பெருவெள்ளம், சூறாவளி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் எதுவானாலும் உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கக் கூடிய பாலினை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கொண்டு போய் சேர்ப்பதில் நமது பால் முகவர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களின் பங்கு அளப்பரியது என்பதில் எவருக்கும் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இந்த சூழ்நிலையில் தற்போது தமிழகத்தில் தொடங்கியிருக்கும் வடகிழக்கு பருவமழை அதிரடியை காட்டும் என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தெரிகிறது என்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் சான்றாக தெரிகிறது.
இந்த தருணத்தில் தமிழகத்தின் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால் குண்டும், குழியுமான சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படாததாலும், மெட்ரோ ரயில் பணிகள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில் பணிகள் முழுமையடையாததால் அதன் பள்ளங்களால் சாலைகள் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதை நன்கறிவோம்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலான சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பிரதான சாலைகள் மட்டுமின்றி தெருச்சாலைகளும், இணைப்பு சாலைகளும் பெருமளவு சேதமடைந்து மேடு பள்ளங்களாக காட்சி அளிக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து கனமழையோ, அதிதீவிர கனமழையோ பெய்யும் பட்சத்தில் பால் விநியோகம் செய்வதில் பால் முகவர்களாகிய நாம் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும்.
அத்துடன் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கும் போது சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது என்பதை பால் முகவர்களாகிய நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஏனெனில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரம் தொடங்கி அதிகாலையில் விடிய, விடிய நமது பால் முகவர்களின் பணிகள் நடைபெறும் என்பதால் ஆங்காங்கே விபத்துக்கள் நடைபெற்றாலும் கூட நம்மை காப்பாற்றவோ, நமக்கு உடனடியாக முதலுதவி செய்வதற்கோ எவரும் வர வாய்ப்பில்லை.
எனவே சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் எனதருமை பால் முகவர்களே, பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களே இந்த கனமழை காலத்தில் “நமக்கு நாமே திட்டம்” போல் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள திட்டமிடுதல் என்பது மிகவும் அவசியமானதாகும். அதற்கு பால் விநியோகம் செய்யும் அதிகாலை நேரத்தில் நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமானதும் கூட.
எனவே அதிகாலை நேரத்தில் பால் விநியோகம் செய்ய செல்லும் போதும், காலையில் விநியோகம் செய்த பாலுக்கான பணத்தை வசூலிக்க இரவில் செல்லும் போதும் வாகனத்தின் பிரேக், சக்கரத்தில் காற்று, எரிபொருள் அளவு எல்லாம் சரியாக இருக்கிறதா..? என்பதை கவனித்து சரி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பால் விநியோகம் செய்யச் செல்லும் வாகனங்களில் மழை கவசத்தை (Rain Coat) மறக்காமல் எப்போதும் கூடவே வைத்திருங்கள், முடிந்தவரை தலைக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், அத்துடன் மழை நீர் அதிகமாக தேங்கியிருக்கும் சாலைகளில் மேடு, பள்ளம் இருப்பது தெரியாது என்பதோடு அதனை கணிப்பதும் இயலாது என்பதால் மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும் போது எப்போதும் மிக கவனமாகவும், மிதமான வேகத்திலும் மட்டுமே வாகனத்தை இயக்கிச் செல்லுங்கள். அல்லது வெள்ளம் போல் தேங்கியிருக்கும் சாலை வழியே பால் விநியோகம் செய்ய செல்வதை முற்றிலுமாக தவிர்ப்பது சாலச்சிறந்தது.
பால் முகவர்கள் ஒவ்வொருவரும் பால் விநியோகத்திற்கு செல்லும் சமயங்களில் பால் முகவர்கள் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் அடையாள அட்டையை மறக்காமல் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதுமட்டுமின்றி உங்களுக்கு அருகில் உள்ள நமது பால் முகவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளின் தொலைபேசி எண்களையும் தவறாது ஒரு அட்டையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அது அவசர காலத்திற்கு கை கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பால் விநியோகம் செய்யச் செல்லும் அதிகாலை நேரங்களில் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் எங்கேனும் பால் முகவர்களின் வாகனங்கள் பழுதாகியோ அல்லது எரிபொருள் இல்லாமலோ நின்று கொண்டிருந்தால் முடிந்த வரை அந்த பால் முகவருக்கு உதவுங்கள். உங்களால் உதவிட இயலாத சூழ்நிலை இருக்குமானால் உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள பால் முகவர்களையோ அல்லது நமது சங்கத்தின் நிர்வாகிகளையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள்.
மழையுடன் காற்று வேகமாக அடிக்கும் சமயங்களில் மரத்தின் கீழோ, மின் கம்பங்களுக்கு அருகிலோ பால் விநியோக வாகனத்தோடு நிற்காதீர்கள். அதேபோல் பால் விநியோகத்திற்கு செல்லும் சாலைகளில் மின்சார கேபிள்கள் கிடப்பதை பார்த்தால் அந்த வழியே செல்வதை தவிர்த்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுங்கள். இதனால் நமக்கு மட்டுமின்றி பிறருக்கு ஏற்படும் ஆபத்தையும் தடுக்க முடியும். இதனை நீங்கள் மட்டுமின்றி உங்கள் பணியாளர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அதுமட்டுமின்றி தரைப்பாலம் வழியாக பால் விநியோகம் செய்ய செல்ல வேண்டியதிருந்தால், அவ்வழியே தான் போயாக வேண்டும் என்கிற சூழல் இருந்தால் மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் மட்டுமே அவ்வழியே பால் விநியோகம் செய்ய செல்லுங்கள்.
கோடைகாலம், பனிக்காலங்களில் மட்டுமல்ல அடைமழை, கனமழை பெய்யும், இயற்கை சீற்றம் அதிகமாய் ஏற்படும் மழைக்காலங்களிலும் கூட பொதுமக்களுக்கான பால் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லாமலும், தங்குதடையின்றி பாதுகாப்பான முறையிலும் செயல்பட்டு குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்கள் அனைவருக்கும் பால் கிடைப்பதில் எந்த ஒரு இடையூறும் இன்றி மக்கள் சேவையை மகேசன் சேவை என்கிற அடிப்படையில் மக்கள் பணியில் மன நிறைவை காண அனைவரும் உறுதியேற்போம்
அன்புடன் சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனத் தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
You must be logged in to post a comment.