சென்னை மாநகரிலேயே தேவையான உற்பத்தி இருக்கும் போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தரமற்ற ஆவின் பால் விநியோகம் ஏன்..? சு.ஆ.பொன்னுசாமி கேள்வி..

சென்னை மாநகரிலேயே தேவையான உற்பத்தி இருக்கும் போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தரமற்ற ஆவின் பால் விநியோகம் ஏன்..? சு.ஆ.பொன்னுசாமி கேள்வி..

சென்னை மாநகரின் தினசரி பால் தேவையில் சுமார் 50% அளவிற்கு பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் என மூன்று இடங்களில் ஆவின் பண்ணைகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பால் கொள்முதலும் சீரான அளவில் நடப்பதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆவின் பால் பண்ணையில் இருந்து அம்பத்தூர் பால் பண்ணைக்கு சுமார் 12ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளும், சோழிங்கநல்லூர் பால் பண்ணைக்கு சுமார் 15ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளும் தலா இரண்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் தினசரி கொண்டு வரப்பட்டு மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு, அவை நுகர்வோராகிய பொதுமக்களை சென்றடைந்து வருவதாகவும், இது நீண்ட காலமாக நடைபெறுவதாகவும் தெரிய வருவதோடு அவ்வாறு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்த ஆவின் பாலில் தான் குளோரின், கொரோசின் உள்ளிட்ட பல்வேறு வகையான துர்நாற்றம் வீசுவதாக அதிகளவு குற்றச்சாட்டுகள் வந்திருப்பதும் கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஏனெனில் கனமழையால் ஏற்படும் பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் சென்னையில் உள்ள பால் பண்ணைகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும் சமயங்களில் வெளி மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் சென்னை மாநகருக்கு கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை தான்.

ஆனால் தற்போது அவ்வாறான சூழல் இல்லாத நிலையில் சென்னையில் உள்ள பால் பண்ணைகளால் சென்னை மாநகரின் தினசரி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கிற நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தினசரி சுமார் 27ஆயிரம் லிட்டருக்கு மேல் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன வந்தது..? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

ஏற்கனவே அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யும் மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் மாதாந்திர அட்டைதாரர்களுக்கான பாலினை காக்களூர் பால் பண்ணையில் இருந்து நீண்டகாலமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் விழுப்புரம் பால் பண்ணையில் இருந்து சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது விநோதமாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி அம்பத்தூர் பால் பண்ணையில் அனுமதி பெறப்பட்ட உற்பத்தி திறனுக்கு மேலாக ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்வதால் கொரட்டூர் ஏரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதாக கூறி ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் கடும் நடவடிக்கை எடுத்த பின்னர் அம்பத்தூர் பால் பண்ணை பகுதி வாரியாக மூடப்பட்டு சீரமைப்பு செய்யப்பட்டதும், அந்த சமயத்தில் பற்றாக்குறையான பாலினை விநியோகம் செய்ய பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து சுமார் 1.5லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஒரு மாத காலமாக சென்னை, அம்பத்தூர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதும் அது குறித்து அப்போது ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே தற்போது ஆவின் பால் குறித்து நுகர்வோர் தரப்பிலிருந்து தொடர்ந்து எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் விழுப்புரம் மாவட்ட பால் பண்ணையில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்வது தொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குநர் அவர்கள் பொதுமக்களுக்கு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!