திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளை மூட உத்தரவிடுங்கள்: -தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்..
தமிழக எதிர்க்கட்சி மற்றும் திமுக தலைவர் மரியாதைக்குரிய திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.
கொரானா நோய் தொற்று காரணமாக உலகநாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் (தமிழகத்தில்) ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுமார் 44நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழக அரசு இன்று (07.05.2020) முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய வியாபாரம் செய்யும் முடிவை எடுத்துள்ள முடிவை பூரண மதுவிலக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
கொரானா நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழ்நிலையில் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக அமைந்துள்ள தமிழக அரசின் சாராய வியாபாரத்தை தாங்கள் கடுமையாக கண்டித்துள்ளதோடு, இன்று பொதுமக்கள் அனைவரும் கறுப்புச் சின்னம் அணிந்து தங்களின் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளீர்கள். அதற்காக எங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மக்கள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு தமிழக அரசின் சாராய வியாபாரத்தை கடுமையாக கண்டித்திருப்பதோடு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரும் தாங்கள் தங்களது கட்சியினர் நடத்தும் சாராய ஆலைகளை உடனடியாக மூடவும், டாஸ்மாக் கடைகளுக்கு சாராயத்தை விநியோகம் செய்ய வேண்டாம் எனவும் உத்தரவிட வேண்டுகிறோம். நீங்கள் அவ்வாறு செய்யும் போது ஆளுங்கட்சியினர் நடத்தும் சாராய ஆலைகளையும் மூட வாய்ப்புகள் உருவாகும்.
ஏனெனில் தங்களது கட்சியினர் நடத்தும் சாராய ஆலைகளில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு சாராயம் செல்வது நிறுத்தப்படுமானால் சாராயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும். அதனால் குடிமக்களுக்கு சாராயம் கிடைப்பது தடுக்கப்படும். அதுமட்டுமின்றி தவறு செய்பவர்களுக்கு துணை போய் கொண்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என சொல்வது என்பது நியாயமில்லை என்பதை அறியாதவரல்ல தாங்கள்.
எனவே தங்களின் கட்சியினர் நடத்தும் சாராய ஆலைகளை உடனடியாக மூடவும், டாஸ்மாக் கடைகளுக்கு சாராயத்தை விநியோகம் செய்வதை நிறுத்தவும் நீங்கள் உத்தரவிட்டு முன்மாதிரியாக செயல்படுவீர்களேயானால் அது தான் உண்மையான மக்கள் நலனாக இருக்க முடியும். ஆனால் நாங்கள் உற்பத்தி செய்வோம் நீங்கள் விற்பனை செய்யக் கூடாது என்பது “நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன். நீயும் அழுகிற மாதிரி நடி என்பதாகவே பொதுமக்களாகிய நாங்கள் நினைக்கத் தோன்றும்.
நன்றி.
சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனர் & மாநில தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.


You must be logged in to post a comment.