கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி வனம் எரிவாயு தகனக் கூடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் தகனக்கூடம் தற்காலிகமாக செயல்பாட்டில் இருக்காது எனவும் மீண்டும் 11.10.2025 முதல் சேவைகள் தொடங்கும் என்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து மேட்டுப்பாளையம் நெல்லித் துறை சாலையில் எரிவாயு தகன மேடை அமைத்துள்ளன. கடந்த ஜனவரி 21, 2013 அன்று அதிகாரப் பூர்வமாக தகனக்கூடம் திறக்கப்பட்டது. உள்ளூர், வெளியூர் பொது மக்கள் தகன தேவைகளை சிறப்புடன் நிறைவேற்றி வந்தனர்.
இந்நிலையில், எரிவாயு தகனக் கூடத்தின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் செயல் திறன் ஆகியவற்றை தரம் உயர்த்தவும், பொது மக்களுக்கு சிறந்த வசதி அளிக்கவும் அவ்வப்போது பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. அந்த வகையில், சாந்தி வனம் எரிவாயு தகன மேடையில் கூடுதல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 20.9.2025 முதல் 10.10.2025 வரை மேட்டுப்பாளையம் எரிவாயு தகனக் கூடம் தற்காலிகமாக செயல்பாட்டில் இருக்காது. மீண்டும் 11.10.2025 முதல் சேவைகள் தொடங்கும் என்று மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா மற்றும் மேட்டுப் பாளையம் ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் இதற்கு ஏற்றார் போல் தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ள நகராட்சி நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.