கோவை–நீலகிரி மாவட்டங்களில் பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் திடீர் ஆய்வு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பள்ளிகளில் உள்ள கல்வி சூழல், மாணவர்களின் கற்றல் நிலை, ஆசிரியர்களின் பணிநிலை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் நேரில் பார்வையிட்டார். மேலும் மாணவ– மாணவியர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, கல்வி தொடர்பான சிக்கல்கள், எதிர்கால இலக்குகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக நீலகிரி மலை மாவட்டத்தில் பழங்குடியினர் மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்ற இயக்குனர், மாணவர்களுடன் நெருக்கமாக உரையாடினார். அவர்களிடம் பாடப்பயிற்சி நிலை, கல்வி தொடர்பான சவால்கள் மற்றும் உயர்கல்வி குறித்த விருப்பங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினார். இயக்குனரின் எளிமையான அணுகுமுறை மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்த இயக்குனர், அங்கு நடைபெற்று வரும் புதிய கட்டடப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். கட்டடப் பணிகளின் தரம் மற்றும் முன்னேற்ற நிலை குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் உள்ள குடிநீர் வசதி, கழிப்பறை, வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மாணவிகளின் வருகை மற்றும் கல்வி முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மாணவிகளுடன் உரையாடிய இயக்குனர் முனைவர் கண்ணப்பன், “மாணவிகள் நல்ல கல்வி கற்றால் தான் சமூக முன்னேற்றம் சாத்தியம். தமிழக அரசு மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக கல்வி உதவித்தொகை, இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும்” என அறிவுறுத்தினார்.இந்த திடீர் ஆய்வு மற்றும் நேரடி கலந்துரையாடல் ஆசிரியர்களிடையே பொறுப்பு உணர்வையும், மாணவ–மாணவியர்களிடையே கல்வி மீதான ஆர்வத்தையும், தன்னம்பிக் கையையும்  அதிகரித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!