மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் – கல்லூரிக் கனவு திட்டத்தின்கீழ் ஆறு அரசு பள்ளி மாணவ மாணவியர் 200 பேர் தங்கள் ஆசிரியர்களுடன் 21.1.2024 அன்று கல்வி வழிகாட்டிப் பயணமாக கல்லூரிக்கு வருகைபுரிந்தனர். வருகை புரிந்த மாணாக்கர்களைக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவியர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். வரவேற்புக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீகானப்பிரியா அவர்கள் கல்லூரியின் சிறப்புக்களை எடுத்துரைத்தார். அரசு கல்லூரியில் பயில்வதன் பயன்களையும், இக்கல்லூரியில் வழங்கப்படும் கல்வியையும் விரிவாக எடுத்துரைத்தார். கல்வியோடு பிற கல்விசார் செயல்பாடுகள் என்னென்ன வெல்லாம் இருக்கின்றன என்பதையும் அவற்றின் வாயிலாக ஒரு சமூக அக்கறையுள்ள மனிதனாக ஒவ்வொரு மாணவரும் உயர முடியும் என்பதையும் கூறினார். தான் இளம் வயதில் கற்ற கல்வியையே முன்னுதாரணமாக எடுத்துரைத்து மாணவர்களிடையே கல்வியின்மீது நம்பிக்கை ஊட்டினார். பின்னர், ஒவ்வொரு துறைத்தலைவரும் அவரவர் துறையில் வழங்கும் பட்டப்படிப்பு தொடர்பாகவும் அப்படிப்பின் மூலம் கிடைக்கும் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார்கள். மதிய உணவுக்குப் பிறகு, மாணவர்கள் ஒவ்வொரு துறையாகச் சென்று அங்குள்ள கல்வி வசதி வாய்ப்புகளை நேரடியாகத் தெரிந்து கொண்டனர். நாள் முழுதும் பெற்ற அனுபவங்களை மாணவர்கள் பின்னூட்டங்களை எடுத்துரைத்தனர். என்ன படிக்கவேண்டும், எங்கே படிக்கவேண்டும் என்ற தெளிவின்றி இருந்த அவர்களுக்குக் கல்லூரிக் கனவு நிகழ்வு மிகப்பெரிய திறப்பாக அமைந்ததாகக் கூறினர். அரசு கல்லூரியில் பயில்வதன் நன்மைகளை அறிந்ததாகவும் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளை வரும் காலங்களிலும் அடுத்தடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பயில வரும் மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். முன்னதாக இந்நிகழ்வுக்கு வருகைபுரிந்த அனைவரையும் கணினி அறிவியல்துறைத் தலைவர் முனைவர். அ. மாரிமுத்து வரவேற்றார். இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மோ. செந்தில்குமார் நன்றி நவின்றார். ஆங்கிலத்துறைத் தலைவரும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப் பாளருமான முனைவர் க.ஆ. ஜெயசங்கர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.










You must be logged in to post a comment.