கீழக்கரையில் காவல்துறை அதிகாரி தலைமையில் போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம்..
ஆசிரியர்
January 21, 2018
கீழக்கரையில் இன்று (21-01-2018) காவல்துறை ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல் நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல் வேறு சமூக அமைப்புகள் ,வர்த்தக அணி மற்றும் அரசியல் கட்சிகள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காவல்துறை ஆய்வாளர் பேசுகையில் நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் அளவுக்கு மேலாக ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணம் செய்தல், முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபரீதம் மற்றும் அதன் விளைவுகளை விளக்கினார்.
ஊருக்ககுள் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பது, சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்துதல், பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதை தடுத்தல் போன்ற விசயங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. அதே போல் போதை பொருள் விற்பதை தடுப்பதற்கு இரவு நேரங்களில் அவசியம் இல்லாமல் சாலைகளில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும் காவல்துறை சார்பாக வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் கீழக்கரை முக்கிய சாலைகளில் வாகனங்களால் ஏற்படும் நெரிசல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அதற்கான தீர்வு காணும்படி வலியுறுத்தினர்.