இராமநாதபுரம்,அக்.12-இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்து, 61-வது குருபூஜை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கத்துரை முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனங்கள், சைக்கிள், திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைபயனமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. 4 சக்கர சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனத்தில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் மது பாட்டில்கள் எடுத்து செல்லக்கூடாது. வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்யக்கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் எதும் எடுத்துச் செல்லக்கூடாது. வழித்தடங்களில் வெடி போடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் வரும்போது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடத்தில் நிறுத்தக் கூடாது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 10 மணிக்குள் புறப்பட வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களால் அனுமதிச் சீட்டு பெறாத வாகனங்களுக்கு சோதனைச் சாவடிகளில் அனைத்தும் சரி பார்த்த பின்னர் வழங்கப்படும். வாகன அனுமதி பெறப்படாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
பிற மாவட்ட வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் உரிய அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுத்த வழித்தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ள வழித் தடங்களில் செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அக்.29, 30 தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முன் மனு அளிக்க வேண்டும். அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்த அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் 1 வாரத்திற்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் நேரம் ஒதுக்கி தர விண்ணப்பம் அளிக்கவேண்டும். ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்து அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து அஞ்சலி செலுத்தி முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு பிரசனை நடைபெறாமல் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகளை கண்டிப்பாக கடைபீடிக்க வேண்டும் என அனைவரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவதை கருத்தில் கொண்டு பிற மாவட்டத்தினரும் நமது மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மூலம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு போல் பேனர் வைப்பதை தடுத்திடவும், அரசு கட்டடங்களில் விளம்பரம் செய்வதை தடுத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









