இராமநாதபுரத்தில் கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இந்திய வானிலை மையத்தின் கனமழை முன்னெச்சரிக்கை அறிவிப்பினை தொடர்ந்து இன்றைய தினம் (01.12.2020) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப்
யாதவ், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: இந்திய வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதியானது புயலாக மாற வாய்ப்புள்ளதால் இராமநாதபுரம் மாவட்டத்தில் 02.12.2020 முதல் 05.12.2020 வரையிலான நாட்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிக வேகத்துடன் காற்று வீசக்கூடும் எனவும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள ஏதுவாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன. எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் துணை ஆட்சியர் நிலை அலுவலர் தலைமையில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைத்திட 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடங்கள் உட்பட திருமண மண்டபங்கள், பள்ளி கட்டடங்கள் என 197 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சுவர் கொண்ட ஓட்டு வீடுகள், குடிசைகளில் வசிக்கும் மக்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்திட வேண்டும். இப்பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிளை உறுதி செய்திட வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு மையத்தில் உள்ள பொதுமக்களுக்கு முகக்கவசம், சானிடைசர் போதிய அளவு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். காற்றின் வேகம் அதிகளவில் இருக்கும் எனவும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மரங்கள் ஏதும் சாயும் பட்சத்தில் சாலை போக்குவரத்து பாதிக்காத வகையில் உடனடியாக சீர்செய்திட 98 எண்ணிக்கையில் உயர் மின் அழுத்த மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடையும் பட்சத்தில் போர்க்கால அடிப்படையில் சீர் செய்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலர்கள் தயார்நிலையில் இருந்திட வேண்டும். மீட்பு பணிகளுக்காக 324 ஜேசிபி இயந்திரங்கள், 24 உயர் மின் அழுத்த தண்ணீர் உறிஞ்சு பம்புகள், 16,800 மணல் மூடைகள், 3,563 மின்கம்பங்கள், 1,020 சவுக்கு மரக்கட்டைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் முன்னேச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்புடன் இருப்பது மீன்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவசரகால சூழ்நிலைக்கேற்ப பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அரசுத்துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார்நிலையில் இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) மா.பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி, ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, இணை இயக்குநர்கள் (மருத்துவ நலப்பணிகள்) ஏ.சகாய ஸ்டீபன்ராஜ், (வேளாண்மை) குணபாலன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேல், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.லயோலா இக்னேஷியஸ் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.