TARATDAC நிலக்கோட்டை ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம்…

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிலக்கோட்டை ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (14.05.19) மாலை 05.00 மணியளவில் விளாம்பட்டியில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் பஞ்சு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பகத்சிங், ஒன்றிய தலைவர் சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். முடிவில் எத்திலோடு கிளை செயலாளர் தனபாண்டி நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்காத கனரா வங்கியை கண்டித்து தீர்மானம். திண்டுக்கல் மாவட்டத்தில் சுய தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி வங்கிக்கடன் வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் கடந்த 10.01.19 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கனரா வங்கியின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் மாவட்டம் முழுவதும் 44 லட்சம் ரூபாய் அளவிற்கு சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் வழங்கினார். மாவட்ட ஆட்சியரே நேரடியாக மாற்றுத்திறனாளிகளிடம் வங்கிக்கடனுக்கான ஆணையை வழங்கியதால் அதை பெற்ற மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் உடனடியாக கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

குறிப்பாக விளாம்பட்டி கனரா வங்கியின் மூலமாக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்து இன்றுவரை வங்கிக்கடன் வழங்காத சூழ்நிலையே உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக வங்கிக்கும் வீட்டிற்கும் அலைந்து திரிந்து இன்றுவரை வங்கிக்கடன் கிடைக்காமல் மிகுந்த ஏமாற்றத்தோடு மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர். அதேபோல கன்னிவாடி கனரா வங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தருவதாக உத்திரவாதம் அளித்த பணத்தில் பாதியை மட்டும் அளித்துவிட்டு மீதி பணத்தை ஆறு மாதங்களுக்கு பின்னர்தான் தருவேன் என்று சொல்லி மாற்றுத்திறனாளிகளை துன்புறுத்தி வருகிறார்கள். இப்படியாக மாற்றுத்திறனாளிகளை தொடர்ச்சியாக வங்கிக்கடன் தருகிறோம் என சொல்லி இன்றுவரை வங்கிக்கடன் வழங்காமல் இருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் உத்திரவாதம் அளித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வருகிற 03.06.19 தேதிக்குள் விளாம்பட்டி கனரா வங்கி வங்கிக்கடனை வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வருகிற 04.06.19 அன்று விளாம்பட்டி கனரா வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!