கல்குவாரியால் வீடுகள்,விவசாயநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி உசிலம்பட்டி அருகே லாரிகளை சிறை பிடித்து பிடித்து மக்கள் போராட்டம்

 

உசிலம்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருவதால் பகல் இரவு பாராமல் வெடிகள் வெடிப்பதால் வீடுகள் அதிர்வு ஏற்படுவதாகவும், விவசாய நிலத்துக்கு அருகிலேயே குவாரி இருப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டிய கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால் குவாரியிலிருந்து வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி பெருங்காமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவநாதபுரத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.மேலும் 200 ஏக்கருக்கும் மேலாக இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கிராமத்தின் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான 13ஏக்கர் நிலத்தில் கல்குவாரி செயல்பட அனுமதி அளித்த நிலையில் அங்கு குவாரியில் பாறைகளுக்கு வைக்கப்படும் வெடியால் வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாகவும் இரவு பகல் என எந்த நேரமும் வெடிவைத்து பாறைகளை உடைப்பதால் தங்களால் வீட்டிற்குள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மேலும் இந்த பகுதியில் 200 ஏக்கருக்கும் மேலாக விவசாயங்கள் நடைபெற்று வருகிறது.விவசாய நிலங்களுக்கு அருகிலேயே 100 மீட்டர் தொலைவில் குவாரி செயல்பட்டு வருவதால் அங்கிருந்து வரக்கூடிய மண் துகள்களால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் இப்பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பு அதிகம் இருப்பதால் குவாரி தூசிகளால் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி குவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து குவாரியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான லாரிகளால் குழந்தைகள் முதியவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் தொடர்ந்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து இன்று காலை குவாரியிலிருந்து கல்ஏற்றி வந்த மூன்று லாரிகளை திமுக நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமையில் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.சிவனாதபுரத்தில் செயல்படும் குவாரியை உடனடியாக மூட வேண்டும் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களது கிராம மக்களின் சார்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!