கருப்பட்டி ஊராட்சியில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு – பட்டியல் சமூக மக்கள் அவதி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி, வாடிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், குடிநீரில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சிலர் மேல்நிலை தொட்டியைச் சரிபார்த்தபோது அதில் மலம் கலந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

துணை ஆட்சியர், ஊராட்சி உதவி இயக்குநர், வாடிப்பட்டி வட்டாட்சியர், சமயநல்லூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர், சோழவந்தான் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மலம் கலந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரிவித்ததாவது:

எங்கள் காலனி பகுதியைச் சுற்றி ஏராளமான காலியிடங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் அதை தான் கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்த குடிநீர் தொட்டியின் மேல் சிறுவர்கள் ஏறி மலம் கழித்தார்கள் என்ற விளக்கத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் பகுதிக்கு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு தண்ணீர் திறந்து சில நாட்களே ஆகின்றன. இந்த நிலையில் இவ்வாறு மலம் கலந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது, என அவர்கள் கூறினர்.

மேலும், சுத்தம் செய்வது மட்டுமல்ல, இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும், எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் மதுரை அம்ச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது அதேகிராமத்தை சேர்ந்த சிறுவன் தவறுதலாக செய்தது என தெரிய வருவதாகவும் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்ததாவது:இரண்டு நாட்களுக்கு முன்பு குடிநீர் வரவில்லை என கூறி, சில சிறுவர்கள் தொட்டியின் மேல் ஏறியதாக தகவல் உள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது, என தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!