உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வகுரணி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு அயோத்திபட்டி, சந்தைப்பட்டி வழியாக கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் குடிநீர் வரும் வழியில் சட்டவிரோதமாக குழாய் அமைத்து குடிநீர் திருடுவதால் மேட்டுபகுதியான வகுரணி கிராமத்திற்கு குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உசிலம்பட்டி பேரையூர் மெயின் ரோட்டில் உள்ள கணவாய்கேட்டில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் நகர் காவல் நிலைய எஸ்ஐ மணிமொழி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ஆகியோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டுகுடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.