உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மாவட்ட கிளையின் அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முருகன் தலைமை தாங்கினார்.உசிலம்பட்டி வட்டாரச் செயலாளர் இரா.செ. தமிழ்மணி வரவேற்புரை வழங்கினார்.மாவட்டச் செயலாளர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கள்ளர் சீரமைப்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 18 இடைநிலை ஆசிரியர் பணி நாடுனர் பட்டியல் பெறப்பட்டுள்ளது தொடர்பாகவும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக 23 பட்டதாரி ஆசிரியர் பணி நாடுனர் பட்டியல் பெறப்பட்டும் இதுவரை இரண்டு ஆசிரியர் பணி நியமனங்களும் செய்யப்படாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடக்கக் கல்வித்துறை ஆதிதிராவிட நலத்துறை பழங்குடியினர் நலத்துறையில் உடனடியாக ஆசிரியர் நியமனம் செய்யப்பட்ட செய்தி அறிந்த பின்பும் கள்ளர் சீரமைப்பு நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவது ஏற்றுக்கொள்ள இயலாததுஎன தெரிவிக்கப்பட்டது. எனவே உடனடியாக மிக விரைந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கூடுதலாக 66 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும், 98 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும், 35 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும் மற்றும் 20 உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும் கடந்த காலங்களில் செய்ததை போல் கள்ளர் சீரமைப்பிற்கு என ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தனியாக தேர்வு நடத்தி உடனடியாக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்திட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆசிரியர் நியமனம் தாமதப்படுத்தப்படும் சூழ்நிலையில் அமைப்பின் சார்பாக கடுமையான போராட்டங்களை நடத்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.