மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி பகுதியில் உள்ள முனியாண்டிபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயச்சந்திரன் என்பவர் மற்றும் அவரது சகோதரியான மனநலம் குன்றிய நிலையில் உள்ள சுப்புலட்சுமியுடன்-(55) இருவரும் தனியாக வீட்டில்
வசித்துவந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அண்ணன் ஜெயச்சந்திரன் சமையலறையில் தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து இரத்தம் அதிகளவிற்கு வெளியேறியதால் உயிருக்கு போராடிய நிலையிலும் மனநலம் குன்றிய சகோதரியால் அதனை உணர முடியாத நிலையில் துடிதுடிக்க உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து பாதிக்கப்பட்ட சகோதரி தன் அண்ணன் தூங்குவதாக நினைத்துகொண்டு தினசரி சமையலறையில் சமைத்து உண்டு வந்துள்ளார். சில நேரங்களில் அண்ணனின் சடலத்தின் மேல் நின்றபடி சமைத்துள்ளார்.இதனால் அவரது கால் பட்டு உடலில் சேதமடைந்த நிலையில் இன்று காலை முதல் கடுமையான துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளவர்கள் அளித்த தகவலையடுத்து சுப்ரமணியபுரம் போலிசார் கதவை உடைத்து சென்று பார்த்தபோது சுப்புலட்சுமியின் அண்ணன் ஜெயச்சந்திரன் உயிரிழந்த நிலையில் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் மீட்டெடுக்கப்பட்டது.உடலின் அருகில் அவரது சகோதரி உணவு உண்டபடி இருந்த நிலையில் தனது அண்ணன் உறங்குவதாகவும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என காவல்துறையினரிடம் கூறியுள்ளார் .இதனையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சுப்ரமணியபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இருவரது உறவினர்கள் குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.