உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியதை தொடர்ந்து நாள்தோறும் அம்மனும் சுவாமியும் தங்க பல்லாக்கு, குதிரை, யாளி, நந்திகேஸ்வரர் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்நிலையில் 64 திருவிளையாடல்களில் புகழ்பெற்ற நிகழ்வான மீனாட்சியம்மனுக்கு அரசியாக மகுடம் சூட்டும் பட்டாபிஷேகம், நேற்றைய தினம் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் வில் போர் புரியும் திக்விஜயமும் நடைபெற்று முடிவடைந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து மணக்கோல சிறப்பு அலங்காரத்தில் தங்க கீரிடம், வைர ஆபரணங்களோடு பிரியாவிடை அம்மனுடன், சுந்தரேஸ்வரர் வெள்ளி யானை வாகனத்திலும், வண்ண வண்ண வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தனி பூப்பல்லக்கில் மீனாட்சியம்மன் மணப்பெண் அலங்காரத்தில் எழுந்தருளினார்.தொடர்ந்து கோவில் யானை முன் செல்ல, சிவ பக்தர்கள் வாத்தியங்கள் முழங்க, கோவில் ஆடி வீதிகளில் அம்மனும், சுவாமியும் திரு வீதி உலா வந்தனர்.கொரானா எதிரொலியாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் நிகழ்ச்சிகளை இணையதளத்தில் மட்டும் பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் பூப்பல்லக்கு நிகழ்வு யூ டியுப் மற்றும் அறநிலையத்துறை இணையதளங்களில் நேரலை செய்யப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.