மதுரை:பல்வேறு சமுதாய மக்கள் வாழும் நகரம்; ஒரே நாடு; சிறந்த நாடு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு- பிரதமர் மோடி புகழாரம்.

மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மதுரை பாண்டிகோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வெற்றிவேல், வீரவேல் என தமிழில் தனது உரையை தொடங்கினார். அனைவரும் நலமா? மதுரை வந்தது எனக்கு மகிழ்ச்சி. மதுரை மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தின் மையப் புள்ளியாக திகழ்கிறது மதுரை நகரம். பல்வேறு சமுதாய மக்களும் வாழும் நகரமாக மதுரை விளங்குகிறது. ஒரே நாடு; சிறந்த நாடு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மதுரை என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

மதுரை மண்ணில் பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி பேசினார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு உறுதியான ஆதரவை அளித்தவர்கள் மதுரை மக்கள். 3 முறை முதல்வராக இருந்த எம்ஜிஆர், மதுரைக்குட்பட்ட தொகுதிகளில்தான் போட்டியிட்டார். நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த தேசிய ஜனநாயகக்கூட்டணி பாடுபடுகிறது. உள்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்றவற்றிற்காக மத்திய அரசு அதிக அளவு நிதி ஒதுக்கியுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

மதுரை- கொல்லம் ரயில் திட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு ரயில்வே திட்டங்களுக்கு 238 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜல் ஜூவன் திட்டத்தின் மூலம் 2024ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். ஜல் ஜூவன் திட்டத்தின் மூலம் 16 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வேளாண் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிக தொழிற்சாலைகள் இங்கு வருவதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எளிதாக தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்றும் உறுதியளித்தார். வரிக் கொடுமையை மத்திய அரசு குறைத்துக் கொண்டிருக்கிறது. மித்ரா என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்படும். மதுரையில் ஜவுளிப் பூங்கா திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!