பெண்கள் அனைவரும் வரதட்சனை கொடுக்கவோ வாங்கவோ மாட்டோம் என இந்த உலகப் பெண்கள் தினத்தில் சூளுரை ஏற்கவேண்டும் என மதுரையைச் சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஏழை மக்களை ஒருங்கிணைத்து மேற்கொண்ட வறுமை ஒழிப்புப் பணிகளுக்காக கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் நாள், டெல்லியில் நடைபெற்ற விழாவில் அன்றைய பிரதமர் வாஜ்பாய், மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கினார். இந்தியத் துணைக்கண்டமே அதிர்ந்த அந்த நிகழ்வு தமிழகத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போதிருந்து தமிழகம் அறிந்த மாபெரும் ஆளுமையாக சின்னப்பிள்ளை வலம் வரத் தொடங்கினார்.மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அருகே உள்ள பில்லுசேரி எனும் குக்கிராமத்தில் பத்மஸ்ரீ சின்னபிள்ளை வசித்து வருகிறார். உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘வறுமை ஒழிப்பு, கந்துவட்டி கொடுமையிலிருந்து விடுதலை, குடிபோதையிலிருந்து மீட்பு, வரதட்சணை கூடாது என்ற நான்கு முக்கிய கொள்கைகளை முன்வைத்து எங்களது களஞ்சிய இயக்கம் உருவானது.அந்த நோக்கத்திற்காகவே தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரம், கர்நாடகம், பாண்டிச்சேரி, ஒடிசா உள்ளிட்ட 14 மாநிலங்களில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தொடர் பரப்புரை மேற்கொண்டோம். மேற்கொண்டு வருகிறோம். எங்களைப் போன்ற பெண்கள் முதன்முதலாய் வீட்டை விட்டு வெளியே வருவது என்பது மிக சவால் மிக்கதாக இருந்தது. இன்று எங்களது கலைஞ்சி இயக்கம் மூலமாக மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறோம்.இந்த நேரத்தில் பெண்களுக்காக நான் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி மிக அவசியம். தாய் தந்தையரை பேணிப் பாதுகாப்பது அவர் சொற்படி நடப்பது அதைவிடவும் அவசியம். சமூகத்தளைகளான வரதட்சணை மதுபோதை கந்து வட்டி ஆகியவற்றை முற்றுமாக ஒழிக்க வேண்டும். இந்த மகளிர் தினத்தில் பெண்கள் அனைவரும் வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ மாட்டோம் என சூளுரை ஏற்க வேண்டும். அதைப்போன்று மது போதை ஏற்ற தமிழகத்தை உருவாக்க ஒவ்வொரு பெண்ணும் முன்வர வேண்டும் என்றார்.மேலும் அவர் கூறுகையில், தற்போது வயது முதிர்வின் காரணமாய் எனது பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் இன்னமும் அதே சிந்தனையில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். நீ அடுத்து வருகின்ற தலைமுறைப் பெண்கள் சமூகப் பிரச்சனைகளை கையில் எடுத்து இயங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.மத்திய அரசின் ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடமும், தமிழக அரசின் பொற்கிழி விருதை முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமும், அவ்வையார் விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும், பத்மஸ்ரீ விருதை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் பெற்றிருந்தாலும் கூட எந்தவித கர்வமும் இன்றி அதே எளிமையுடன் வலம் வருகிறார் சின்னப்பிள்ளை. வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு பெண்களும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது உலகப் பெண்கள் தின செய்தி…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.