மதுரை மாநகர் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்தது. பொருளாளர் தங்கம், செய்தித்தொடர்பாளர் அண்ணாதுரை, அரவிந்தன், முன்னாள் வடக்கு மண்டல தலைவர் ஜெயவேல், கிழக்கு மண்டல தலைவர் சண்முகவள்ளி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: மதுரை மாநகர் வளர்ச்சிக்காக எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க., அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளது. மதுரையில் மட்டும் 288 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கியுள்ளது. மாநகரில் 1299 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் நிலை அறிந்து தற்போது விவசாயக் கடன் ரத்து, மகளிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.கமிட்டி உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் இந்த அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். மதுரை மாநகரில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற வேண்டும்.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று கூறி வருகிறார். ஆனால் பொது மக்களிடையே முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி தான் பீண்டும் முதல்வராக வர வேண்டும் என்ற கருத்து உள்ளது. கமிட்டி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் இதுவரை எந்த பணியிலும் முறையாக செய்யவில்லை. தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இருந்த போது போல் தற்போது எளிதாக ஓட்டுகளை பெற முடியாது. எனவே தொண்டர்கள் கடினமாக உழைக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர் இன்னும் தங்கள் பணிகளை முறையாக செய்யவில்லை. போஸ்டர், பிளக்ஸ் அடித்து ஒட்டி நாடகமாடக் கூடாது. புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் மாநகராட்சித் தேர்தல் வந்து விடும். பொதுத் தேர்தலில் பூத்களில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் தான் சீட் வழங்கப்படும். நாடகமாடுபவர்கள் ஒதுக்கப்படுவர்.குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து கண்மாய்கள், ஏரிகள் நிறைந்து தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற நிலை உள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை பணி குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க., முயற்சி செய்து வருகிறது. தி.மு.க.,வில் விருப்ப மனு தாக்கலின் போதே அராஜகம் துவங்கிவிட்டது. அவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் அராஜகம் தலை தூக்கிவிடும்.
முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் குளறுபடி வரும் என எதிர்பார்த்தனர். அதனை தவிடுபொடியாக்கி விட்டது நமது அ.தி.மு.க., தலைமை. எனவே தொண்டர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.முதல்வரின் தீவிர முயற்சியால் அவரது சாதனைகள் தற்போது தமிழகம் முழுவதும் விளைந்த கதிர் போல் வாக்குகள் உள்ளன. அவற்றை சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்ய வேண்டிய பொறுப்பு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் உள்ளது. எனவே கடினமாக உழைத்து மதுரை மாநகர் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள 10 தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட வேண்டும் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.