கொரோனாவால் மூடப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை திறக்க கோரி வழக்கு.

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மூடப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள கடைகளை திறக்க கோரிய வழக்கில் அனுமதி அளித்து திறக்கப்பட உள்ள கடைகளை ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோவில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கடைகாரர்கள் சங்கத்தின் சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தின் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 22 கடைகளில் பூ விற்பனையும், மற்ற கடைகளில் மஞ்சள், குங்குமம், பூஜை சாமான்கள், புத்தகங்கள் மற்றும் நகைகள் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தக் கடைகள் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற தீ விபத்தில் 40 க்கும் அதிகமாக கடைகள் தீயில் முழுவதுமாக சேதமடைந்தன. தீ விபத்து நடைபெற்று 8 மாதங்களுக்குப் பின்பு குறிப்பிட்ட சில கடைகளை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்பு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மீண்டும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. செப்டம்பர் 2020ல் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தும், கோவில் நிர்வாகத்தின் சார்பாக கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 2021 ஜனவரி 14ல் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி, நிலையான வழிகாட்டு நடைமுறையின் (Standard Operating Procedure) படி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்து அறநிலையத்துறையின் அறிவுரைப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் உள்ளே செயல்படும் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் உள்ளே உள்ள கடைகள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளது ஏற்கத்தக்கதல்ல. எனவே கோவில் நிர்வாகம் சார்பாக 2021 ஜனவரி 14ல் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. கோயில் நிர்வாகத்தின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் எந்தெந்த கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது? எந்தெந்த கடைகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளது? திறக்க உள்ள கடைகளை ஆய்வு செய்த பின் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.மனுதாரர்கள் தரப்பில் கடை உரிமையாளர்கள் வேலை பார்ப்பவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், திறக்க உள்ள கடைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள் திறக்கப்பட உள்ள கடைகளை ஒரு வாரத்திற்குள் ஆய்வுசெய்து கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!