மதுரை: வைகை ஆற்றில் 2 வாரங்களுக்குள் முழுமையாக ஆகாயத்தாமரைகளை அகற்றி பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் தொடங்கி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கியமானதாக வைகை ஆறு விளங்கி வருகிறது.இந்த ஆற்றுக்குள் சாயக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நேரடியாக் கலக்கின்றன. இதனால் வைகை ஆறு மாசுபடுவதுடன் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட கழிவுகள் நுரையாக பொங்கி வெளியே கிளம்பின.இந்த நுரையை தீயணைப்புத் துறையினர் அகற்ற முயன்றனர். அப்போது நுரையானது 15 மீட்டர் உயரம் கிளம்பி சாலையில் சென்றவர்களுக்கும் இடையூறாக இருந்தது. இதேபோல ஆற்றுக்குள் உள்ள ஆகாய தாமரையும் குடிநீரை மாசு படுத்துவதுடன் ஆற்றுக்குள் செல்லும் தண்ணீரின் போக்கை நிறுத்தி தேக்கம் அடைய வைக்கிறது. ஆகவே, வைகை ஆற்றுக்குள் நீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் செல்வதை தடுக்கவும், ஆகாயத் தாமரையை அகற்றவும் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். இதே போன்று மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகை ஆற்றில் கழிவுகள் எதுவும் கலைக்கப்படவில்லை மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், பொதுப்பணித் துறை சார்பாக வைகையாற்றில் ஆகாயத் தாமரையை முழுமையாக அகற்றியதாக தெரிவிக்கப்பட்டது.அப்போது, மனுதாரர் தரப்பில் வைகையாற்றில் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வைகை ஆற்றில் அகற்றப்படாமல் இருக்கும் ஆகாயத் தாமரைகளை இரண்டு வாரத்திற்குள் அகற்றி பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்….. (2)….ஸ்மார்ட் சிட்டியில் பாதசாரிகளுக்கு நடைபாதை? போக்குவரத்துத் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு!மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலைகள் அனைத்திலும் பாதசாரிகளுக்கு நடைபாதை அமைக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், “தென் தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரமாக மதுரை மாநகரம் இருக்கிறது. தூங்கா நகரமாக இருந்து வரும் மதுரையில் இரவு பகலாக பலர் கூலி வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டு 12,330 நபர்கள் சாலை விபத்தில் இறந்துள்ளனர். சாலை விபத்தில் இறப்பவர்கள் படிப்படியாக அதிகரித்து 2018ஆம் ஆண்டு 22,656 நபர்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மதுரையை பொருத்தவரை 2017ஆம் ஆண்டு 72 நபர்களும், 2018ஆம் ஆண்டு 66 நபர்களும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.பாதசாரிகளுக்கு சரியான நடைபாதை வசதிகள் அமைக்கப்படாததே அதிகப்படியான விபத்துக்கு காரணமாக அமைகிறது. சாலைகள் அமைக்கப்படும் சமயத்தில் பாதசாரிகளுக்கு சரியான பாதை வசதி, சைக்கிளில் செல்பவர்களுக்கு சரியான பாதை வசதி அமைக்கப்பட வேண்டும்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 84 விழுக்காடு சாலைகளில் பாதசாரிகளுக்கு சரியான நடைபாதை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இதனால் 15 வயது முதல் 29 வயதுவரை உள்ளவர்களை அதிகப்படியாக சாலை விபத்துகளில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலைகள் அனைத்தும் பாதசாரிகளுக்கு நடைபாதை வசதி செய்து தர உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.(3 ) அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் நியமனத்தில் விதிமீறலா?மதுரை: அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் துறைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மதுரை உத்தங்குடியை சேர்ந்த ரமேஷ் மகாதேவ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ கடந்த 24.12.2020 அன்று பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் சம்பந்தமாக தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதில் பொதுத்துறை இணை இயக்குநராக இருந்த ரமண சரஸ்வதியை, அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமித்தும் ஆணையிடப்பட்டிருந்தது.ஆனால், அறநிலையத்துறை சட்டமானது, இத்துறையில் இணை ஆணையராக பணியாற்றுபவரை மட்டுமே கூடுதல் ஆணையராக நியமிக்க முடியும் என்று கூறுகிறது. அப்படி இருக்கும்போது ரமண சரஸ்வதியை இந்த பதவிக்கு நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது. முழுக்க முழுக்க சட்டவிரோதமாக, தனிநபர் ஒருவருக்காக ஒரு பதவியை ஏற்படுத்தி இருப்பதை ஏற்க முடியாது.எனவே, அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டதை ரத்து செய்து, அறநிலையத்துறை சட்ட விதிமுறைகளை பின்பற்றி பதவி நியமனம் நடக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். அதைத் தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை குறித்து இந்து அறநிலையத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.(4) மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தாக்கல் செய்த மனு:தஞ்சை எஸ்.பி பதிலளிக்க உத்தரவு!மதுரை: காதல் மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கிரக்கெட் வீரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், தஞ்சாவூர் எஸ்.பி, பட்டுகோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூரைச் சேர்ந்தவர் சுரேந்திரன். கிரிக்கெட் வீரரான இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,”சிங்கப்பூர் நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். நானும் தஞ்சாவூரைச் சேர்ந்த சிநேகா என்பவரும் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு சிநேகா குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.இந்நிலையில், சிநேகாவுக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதை சிநேகா என்னிடம் தெரிவித்தார். இதனால் நாங்கள் இருவரும் கடந்தாண்டு டிச.13ஆம் தேதி திருவோணம் செல்வமுருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். தற்போது சிநேகாவை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர்.சிநேகாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு மறுத்தால் சிநேகாவை ஆணவக் கொலை செய்யும் அபாயமும் உள்ளது. தற்போது சிநேகா எங்கிருக்கிறார் என தெரியவில்லை. பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சிநேகாவைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே என் மனைவி சிநேகாவைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.