திருவண்ணாமலை மாவட்டத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, போராடி வந்த ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம், பழங்குடியின உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், 3,500 அடி உயரத்தில், ஜவ்வாது மலை அமைந்துள்ளது, இங்குள்ள, 272 கிராமங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில், தேன், புளி, கடுக்காய், சீத்தா பழம், பலா பழம் உள்ளிட்ட பழங்கள் சேகரித்து விற்பனை செய்தல் மற்றும் விவசாயம் மூலம் உற்பத்தி செய்யும், அரிசி, வாழை, வரகு அரிசி, சாமை அரிசி, மிளகு, ஆகியவையாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும், பொருட்கள் தரமாக உள்ளதால், மவுசு அதிகம்.
மலைவாழ் மக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இடைத்தரர்கள் சந்தை விலையை விட, 60 முதல், 70 சதவீதம் வரை விலை குறைத்து வாங்கி செல்வர். நேரடியாக அதன் பலனை அடைய முடியாமல், மலைவாழ் மக்கள் தவித்தனர். இதையடுத்து, அரசே நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, சந்தைப்படுத்த வேண்டும் என, 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.நேரடி கொள்முதல்: இந்நிலையில், தற்போது, மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு, மலைவாழ் மக்களால் விளைவிக்கப்படும் பொருட்கள் அனைத்தும், கொள்முதல் செய்யப்பட்டு, நேரடியாகவே, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சந்தை படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சந்தையில் பொருட்களின் விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப முழு பலனையும், அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் நிலை உருவாகி உள்ளது.ஜவ்வாதுமலையில் ஆண்டுக்கு, 100 டன் புளி, இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும், இங்கு உற்பத்தியாகும் தேனுக்கு, இந்திய அளவில் மவுசு எப்போதும் அதிகம், எனவே, வரும் காலங்களில், ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், ஜவ்வாது மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர், சரவணகுமார்


You must be logged in to post a comment.