கீழடி ஆய்வில் குழந்தையின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

கீழடி அகழாய்வின் ஒருபகுதியாக கொந்தகையில் குழந்தையின் முழு அளவிலான எலும்பு கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலுர், அகரம், கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19 முதல் நடந்து வருகிறது. கொந்தகையில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று கொந்தகையில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. அதில் ஒன்றில் 75 செ.மீ. அளவுள்ள குழந்தையின் எலும்பு கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. கொந்தகையில் கிடைத்து வருவது அனைத்தும் 2ம் நிலை வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது. தற்போது குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டது 3ம் நிலை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொந்தகை அகழ்வாய்வில் தொடர்ந்து எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு வருவதால் தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் தலைமையிலான அகழ்வாய்வு குழுவினர் மிகுந்த உற்சாகத்துடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!